Tuesday, July 8, 2014

காடு -வனத்தின் மணம்

உண்மையாகவே ஏதோ ஒரு காட்டினுள் சென்று வந்த உணர்வு. ஒருவன் தன் இளமை பருவத்தில் காட்டில் உள்ள தன் மாமாவின் கல்வெர்ட் கட்டுமானவேலைக்கு உதவியாக செல்கிறான். அங்கு இருக்கும் காலத்தில் காடு, காட்டில் உள்ள மனிதர்கள், மிருகங்கள் என அனைத்தோடும் அவன் கொண்ட உறவை பற்றி உரைக்கும் நாவல், காடு . தென் தமிழக பேச்சுமொழியில் உள்ள உரையாடல்கள், படிக்கும் பொழுது மனதிற்குள் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றன.
தன் அன்னையோடு கொண்ட சண்டையினாலும் தன் மாமாவின் அழைப்பினாலும், கல்வெர்ட் வேலைக்கு செல்கிறான் கிரிதரன். அங்கு குட்டப்பனின் பொறுப்பில் அவன் இருக்க, கல்வெர்ட் வேலைகளின் கணக்கு வழக்குகளை அவன் பொறுப்பில் விட்டு செல்கிறார் அவன் மாமா. காட்டினுள் சிறிது சிறிதாக உலாவும் அவனோடு சேர்ந்து நம் மனதையும் உலாவ விடுகிறார் ஜெயமோகன். காட்டிற்கு உள்ளே அவன் செல்லும் பொழுது அவர் கொடுக்கும் விவரங்களில் மனதை செலுத்தினால் நாமும் அவனோடு சேர்ந்து நடப்பதை போன்று உணர முடிகிறது.
அங்கு அவன் குட்டப்பனின் காட்டை பற்றிய தகவல்களை கண்டு வியக்கிறான். நீலியை காணும் அவன் அந்த முதல் சந்திப்பிலேயே தன் மனதை அவளிடம் பறிகொடுக்கிறான். அவளை பற்றி குட்டபனிடம் கேட்டு தெரிந்து கொண்டாலும் தன் காதலை அவனிடம் கூற விரும்பாத அவன், பின்னாளில் என்ஜினீயர் ஒருவரிடம் கூறுகிறான். அவரோடு தான் கற்ற குறுந்தொகை பாடல்களையும் இன்ன பிற பாடலகளையும் பாடி அதில் வரும் கருத்துக்களை அவரோடு கலந்துரையாடி இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள்.
பின்னர் நீலியோடு ஏற்படும் காதல், ரெசாலம் கண்டெடுக்கும் தேவாங்கு, அதனை கவ்வி செல்லும் சிறுத்தை புலி, வேலைக்கு வரும் ராபி, ஆபேல் என அனைவரும் நம் மனதினுள் தங்குகிறார்கள். கிரிதரன் தன் மாமாவின் மகள் வேணியை தான் திருமணம் செய்து கொண்டான் என்று முதலிலேயே தெரியவருவதால் நீலியுடனான காதல் தோல்வியில் தான் முடியும் என்று ஊகிக்க முடிகின்றது. இருந்தாலும், அது மலை ஜாதி பெண் என்பதால் தான் என்று நினைத்திருக்கும் பொழுது, உண்மை காரணம் நம் மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது. அந்த நிகழ்வை நாம் எதிர்பாராத பொழுது கூறுவது அருமை.
ரோடு போட வரும் அரசாங்க ஊழியர்கள் காட்டினை அழிக்கின்றார்கள். இத்தகைய வேலைகளின் போது அழிக்கப்படும் மரங்கள் எல்லாம் விற்க்கபடுவதை சுட்டி காட்டியுள்ளார் ஜெமோ. இதனை பார்க்கும் பொழுது, நம் நாட்டில் பல மலை ரோடுகள் இட்டு அதற்காக பாராட்டும் பெற்றுள்ள ஆங்கிலயே அரசு, அதில் எத்தனை சந்தன மரக்காடுகளையும் அறிய மரங்களையும் அழித்தார்களோ, அதில் எதனை லட்சங்கள்/கோடிகள் தேற்றினார்களோ என்று என்னும் பொழுது, இதில் அவர்கள் நமக்கு அளித்ததை விட எடுத்தது தான் அதிகமோ என்று தோணுகிறது.
பெங்களூரில் இருக்கும் குளிரும் இந்த காட்டில் உள்ள குளிரும் ஒத்துபோகிறது என்றே கூறலாம். அதிலும் இரவினில் படிக்கும் பொழுது மலை மழையில் நனையும் கிரிதரனை விட நமக்கு அதிகம் குளிர்கிறது.அதற்கு ஆசிரியரின் திறைமை காரணம். கிரி மழையில் நனைந்தால் நமக்கு குளிரும் அளவிற்கு அதனை விவரித்துள்ளார்.அவர்கள் குடில் அருகே உள்ள அயனி மரமும், மதம் கொண்ட யானையான கீரக்காதனும், இரு தலைமுறை மிளாக்களும் (மான்கள்), கொட்டி தீர்க்கும் அடைமழையும், குட்டப்பனின் சமையல்களும், ஜெமோவின் எழுத்தும் ஒரு வனத்தை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.
முதல் பக்கத்தில் தனியாளாக நுழையும் நாம், கிரிதரனோடு சேர்ந்து அவன் அன்னையோடு சண்டையிடுகிறோம். பின்னர் அவனோடு சேர்ந்து குடிலில் வசித்து, குட்டப்பன் சமைத்ததை சாப்பிட்டு, நீலியை காதலித்து, ரெசாலதிடம் பைபிள் வாசகங்களை கேட்டு, எஞ்சிநீயருடன் பழைய பாடல்களை கேட்டு, கீரக்கதனை பார்த்து பயந்து, புலியின் வாயில் இருக்கும் தேவாங்கை பார்த்து பரிதாப பட்டு, நீலி இறந்த செய்தி கேட்டு துக்கப்பட்டு நாம் கிரிதரனின் உடலில் வாழும் மற்றொரு உயிராக மாறுகின்றோம். கதையை முடிக்கும் தருவாயில், நாம் காட்டை விட்டு வெளியில் வருவது போலவும் குட்டப்பனும் ரெசாலமும் மாமாவும் ஐயரும் தேவாங்கும் நீலியும் காட்டின் உள்ளே இருந்து நம்மை வழி அனுப்புவது போலவும் உள்ளது.
http://kmanikandan.wordpress.com/2010/12/16/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/

No comments:

Post a Comment