Tuesday, July 8, 2014

காடு -சம்ய சரவணன்

ந்நூலை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் தனது இளம் பிராயத்தில் தேசாந்திரியாக இந்திய தேசம் முழுக்க பல ஊர்களுக்கு பயணித்து இருக்கிறார். பல நகரங்களைக் கடந்து, வனாந்திரங்களைத் தாண்டி, கட்டற்ற நிலையில் அலைந்து திரிந்து இருக்கிறார். அத்தகைய அனுபவங்கள், காடுகள் பற்றிய அவரது பிரமிப்பான கனவுகள் நினைவலைகளாக அவர் வாழ்நாளெல்லாம் பின்தொடரும் நிழலின் குரல்” போல அவரது மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது போல. கானியலாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களின் தொடர்ந்த தூண்டுதலால் காடு பற்றிய இந்நாவலை எழுத ஜெயமோகன் எத்தனித்து இருக்கிறார்.
தமிழ்ப் படைப்புகளில் பெரும்பாலும் சொல்லப்படும் பொருள்களும், அவற்றின் வடிவங்களும் ஒரு வட்டத்திற்குள் அடங்கிச் சுருங்கி வெகு நாட்களாகி விட்டன. மனிதர்களின் பிரச்சினைகளை இயந்திர ரீதியில் அணுகும் எழுத்தாளர்களே இங்கு அதிகம். அவர்கள் அறிந்தவற்றில் இருந்தும், அவர்களின் சுய அனுபவங்களில் இருந்தும் பெற்ற அனுபவங்கள் கொண்டு சுயமாக ஒரு கதைக்கருவை ஒரு தமிழ் படைப்பாளி உருவாக்கினால், அக்கதை கரு மற்றும் வடிவத்தை தமிழ் சமூகம் சார்ந்த அரசியல் இயக்கங்கள், பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த முழக்கங்கள் அனைத்தும் சேர்ந்து அலைக்கழிக்கின்றன. இதன் ஒட்டுமொத்த பாதிப்புகள் அந்த தமிழ் நாவலில் ஏதோ ஒருவகையில் இருக்கத்தான் செய்கின்றன. தான் ஒரு “முற்போக்கு” எழுத்தாளன் என்று நமது தமிழ் எழுத்தாளர்கள் திரும்பத் திரும்ப நிரூபிக்க வேண்டிய சூழலே இப்போது தமிழகத்தில் நிலவுகிறது.
ஆனால், சிலர் இதிலிருந்து விலகி தனித்து நிற்கின்றனர். இதில், சமகாலத்தவர்களில் கோணங்கி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன் போன்றோர் முக்கியமானவர்கள்.
பொதுவாக, எழுத்து என்பது வாழ்வின் சமனற்ற போக்கை, இருண்ட பக்கங்களை, அதன் சிக்கலானத் தன்மையை வாசகனுக்கு கொண்டு செல்வதை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். வாசகனின் வழக்கமான எதிர்பார்ப்புகள், மதிப்பீடுகள் என அனைத்தையும் கட்டுடைத்துக்கொண்டே அது பயணிக்கவேண்டும்.
இதற்கு உதாரணம் வைத்தாற் போன்று இருக்கிறது காடு நாவல். இதன் முதல் அத்தியாயத்தைப் படிக்கும்போதே அது நம்மை உள்ளே இழுத்துக் கொண்டுவிடுகிறது. சீராக எந்த தட்டுத்தடங்கலும் இல்லாது அது மென்மேலும் வளர்கிறது. பின்பு, நுட்பமான முடிவை நோக்கிப் பயணித்து மிக அழகாக நிறைவு பெறுகிறது. இப்படியாக வாசகனை தனது படைப்பிலக்கியத்தால் கற்பனையான ஒரு காட்டுலகிற்குக் கொண்டு சென்று, வாழ்வின் நிதர்சனமான உண்மைகளைப் பற்றிய ஒரு சிலிர்ப்பான அனுபவத்தைப் பெற ஜெயமோகன் முயன்று இருக்கிறார். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
ஜெயமோகனின் காடு நாவல் ஒரு மலை வாழ்க்கையைப் பற்றியது. கனவு மற்றும் நிஜ யதார்த்த நிலை என்ற இந்த இரண்டுக்கும் இடையே மன பிறழ்வுக்கு அடிக்கோலக்கூடிய விளிம்பு நிலை போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனின் கதை. தான் சந்திக்கும் ஓவ்வொரு தோல்வியிலும், அடிவேர் வரை நீண்டு கிடக்கும் கசப்பான நிகழ்வுகளிருந்தும் மீண்டு வர தனியாக ஒரு கனவு வாழ்க்கை வாழும் ஒருவனின் கதை. தனது முதல் காதல் பற்றிய நினைவுகள் தன் இறுதி நாள் வரை கண நேரத்திற்கு ஒரு முறை தோன்றி மறையும் விந்தையை அவனே விரும்பி அனுபவித்து வாழும் கதை.
இந்த நாவல் காடு சார்ந்த வாழ்க்கை முறையைப் பற்றி இதுவரை வாசகனின் மனதில் இருக்கும் கற்பனையை உடைக்கக் கூடியதாக இருக்கிறது. உளவியல் ரீதியாக மனித மனங்களின் அடியில் தோன்றும் வக்கிர எண்ணங்கள் இந்நாவலில் வார்த்தைகளாகக் கொட்டிக் கிடக்கின்றன.
தனது முதல் காதலை காட்டிற்குள் எதிர்கொள்ளும் கிரிதரன் என்ற இளம் வாலிபன், காட்டுக்குள்ளேயே வாழ்ந்து, காட்டின் ஒவ்வொரு அசைவும் அத்துப்படியான குட்டப்பன், காட்டில் கல்வர்ட் கட்டும் தொழிலாளர்களின் மேஸ்திரி ரெசாலம், வேலைக்குப் பிந்தைய பொழுதுகளில் காட்டுக்குள் பைபிளை மிகுந்த முனைப்புடன் படிக்கும் குரிசு, கூலி வேலையாட்களான இணைபிரியா “தோழர்கள்” ஆபேல் மற்றும் ராபி, நாட்டுப்புறக் கோயில் பிரகாரத்தில் விட்டேத்தியாக உளவியல் அறிவுரைகள் கூறும் போத்தி மற்றும் தனது வாழ்க்கையை சுவாரஸ்யமான ஒன்றாக வடிவமைத்துக் கொண்ட வன அதிகாரி அய்யர் என இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் மிகுந்த ரசனை கொண்டவை. அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் நுணுக்கமானவை. இந்தக் கதாப்பாத்திரங்களைக் கொண்டு எழுத்தாளர் வாசகனை காட்டினுள் கைப் பிடித்து “தர தர” வென இழுத்துச் செல்கிறார். பின்பு, அவர் காடு விட்டு வெளியே வந்தாலும், நம்மால் இலகுவாக வெளிவர முடியவில்லை.
காடு குறித்த நமது பார்வை இந்த நாவலுக்குப் பிறகு முற்றிலும் மாறி இருக்கும். எந்நேரமும் மழையின் ஈரத்தோடும், மாறாப் பசுமையோடும் கிடக்கும் காட்டின் தனித்த இயல்பு தான் என்ன? அக்காட்டில் சுற்றி திரியும் மனிதர்களின் மனம் எவ்வாறு அசாதாரண சம்பவங்களுக்கு ஏங்குகிறது? அவர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான பிரச்சினைகள் என்ன என்பதை ஒரு தேர்ந்த வாசகனுக்கு எழுத்தாளர் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார்.
சமகால இலக்கிய உலகில் செவ்விலக்கியம் படைப்பதில் எப்போதும் ஆசை கொள்ளும் ஜெயமோகனின் ஐந்தாவது நாவல் இது. காமம் குறித்து தமிழ் படைப்பாளிகள் எழுதத் தயங்கும் பல சங்கதிகள், இந்த நாவலில் இவரால் சர்வ சாதாரணமாக கைக்கொள்ளப்படுகின்றன. காமம் பற்றிய கட்டற்றச் சுதந்திரம் மனதினுள் எத்தனையோ ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தாலும், சிந்தனையில் அது எப்போதும் ஊறிக் கிடந்தாலும், நாம் பேசும்போதும், பிறர் முன்பான நடத்தையின் போதும் ஒரு தேர்ந்த நடிகரைப் போலவே நடிக்கிறோம். ஆனால், இந்த நாவலில், காமம் குறித்தான ஜெயமோகனின் பார்வை நம்மை சிதற அடிக்கச் செய்கிறது. மனம் அதிர்கிறது. பின்பு அமைதியாகச் சிந்தித்துப் பார்க்கையில் முகம் சிறு புன்னகை கொள்கிறது.
இந்த நாவலில் ஜெயமோகனின் பலம் அவரது சொல்லாட்சி தான். அவரது நுணுக்கமானப் பல சொற்றொடர்கள், பக்கத்திற்கு பக்கம் வியாபித்து இருக்கிறது. வலிமையானத் தமிழ்ச் சொற்கள் ஒன்று சேர்ந்து நிகரில்லாத வார்த்தைகளாக மாறி இருக்கின்றன. உன்னிப்பான கவனம் இந்த நாவலுக்கு தேவையாய் இருக்கிறது. வாசகனின் சிந்தனையோட்டம் தடைபடாமல் அதே நேரத்தில் தடதட வென பூரணமானத் தகவல்கள் கணநேரத்தில் நம்மை எதிர்கொள்கின்றன. திரும்பவும் அந்த வார்த்தைகளை வாசிக்கும்போது மனதினுள் ஏதோ ஒரு மாதிரியான கழிவிரக்கம் நிறைந்த நினைவுகள் தோன்றி மறைகின்றன. சில இடங்களில் காதல் வேதனை கொள்ளும் கிரிதரனின் மனம் பற்றிய விவரிப்புகள் நீண்டதாக இருப்பது ஒரு சிறு குறை. இந்தக் குறையை தாராளமாகப் புறம் தள்ளலாம்.
“இந்த மண்ணில் உன்னதம் எதுவும் முளைக்காது” என்ற விமர்சனப் பார்வை தமிழ் நாட்டில் உண்டு என்று சுந்தர ராமசாமி அடிக்கடி சொல்வதுண்டு. இந்த உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு உன்னதம் சாத்தியம் என்றால் இங்கேயும் சாத்தியமே என்கிறது இந்தக் காடு நாவல். கதைக்களம் அத்தகையது. காவியப் புலமை அத்தகையது. வார்த்தைத் தெளிவு அத்தகையது. குறிஞ்சிக் காட்டின் வாசனை அத்தகையது.
ஒரு விமர்சகனாக இது மிகைப்படுத்திச் சொல்லப்பட்டு இருப்பதாக வாசகர்கள் நினைக்கலாம். ஆனால், எப்போதாவது அரிதாக அரங்கேறும் சில படைப்புக்களை நாம் உரக்கத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போதாவது இன்னும் பல நல்ல ஆக்கங்கள் மற்றோரிடமிருந்தும் உருவாகுமே என்ற எண்ணம் தான் காரணமேயன்றி வேறில்லை.
காடு – ஒரு நல்ல முயற்சி. ஒரு நல்ல ஆக்கம். ஒரு நல்ல படைப்பு.
http://siragu.com/?p=6801

No comments:

Post a Comment