Tuesday, July 8, 2014

காடு-ஜெகத்

நான் ஜெயமோகனை வாசித்த அளவிற்கு வேறு எந்த எழுத்தாளரையும் வாசித்ததில்லை. அவரது புனைவு ஆக்கங்கள் குறித்தும், அவரது சமூக/அரசியல் பார்வைகள் குறித்தும் எனக்கு இரு மாறுபட்டக் கருத்துக்களே உள்ளன. புனைவுகளைப் பொறுத்தவரை ஜெயமோகனின் எழுத்து என்னைக் கவர்ந்த அளவிற்கு தமிழில் வேறு எவருடைய எழுத்தும் கவர்ந்ததில்லை. ஆனால் அவரது புனைவல்லாத ஆக்கங்களில் அவர் முன்வைக்கும் அரசியலும் அவரது சார்புநிலைகளும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரையில் ஜெயமோகனுடைய எந்தப் படைப்பையும் (தொண்ணூறுகளில் இந்தியா டுடேயில் படித்த ஒன்றிரண்டு சிறுகதைகள் நீங்கலாக) வாசித்திருக்கவில்லை. ஊடகங்கள் வழியாக அவரைப் பற்றி உருவாகியிருந்த பிம்பம் (காவி மை கலந்து எழுதுபவர், இடதுசாரி/திராவிட இயக்கத்தினரை கடுமையாக எதிர்ப்பவர், சர்ச்சைகள் மூலம் விளம்பரம் தேடுபவர்..) வாசிக்கத் தூண்டுவதாக இருக்கவில்லை. இப்படி இருந்த எனக்கு அவருடைய எழுத்தில் ஒரு தீவிரமான ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது இலக்கியத்துக்கோ அரசியலுக்கோ அப்பாற்பட்ட ஒன்று. அதற்கான தமிழ் சொல் இன்னும் என் சிற்றறிவிற்கு எட்டவில்லை. ஆங்கிலத்தில் nostalgia.

ஒருமுறை நூலகத்தில் ஆங்கிலப் பகுதியில் ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது யாரோ வரிசைமாற்றி வைத்துவிட்டுப் போயிருந்த ஜெயமோகனின் காடு நாவல் கண்ணில் பட்டது. எடுத்து தற்போக்காக ஒரு பக்கத்தை திறந்து வாசித்தேன். அது ரெசாலம் மேஸ்திரியும் வேலை செய்யும் பெண்களும் உரையாடிக் கொண்டிருக்கும் பகுதி. எனக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் போனது போல ஒரு உணர்வு. நான் என் வாழ்வின் முதல் எட்டு வருடங்களைக் கழித்த என் சொந்த ஊரான அந்த மலையடிவாரக் கிராமம் எனக்கு நினைவுக்கு வந்தது. காடு நாவலில் இடம்பெற்றிருந்த அந்த பேச்சுமொழி அந்த ஊரிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் மட்டுமே வழக்கிலுள்ளதென்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த மண்ணில் வாழ்ந்து அந்தக் காற்றை சுவாசித்த ஒரு மனிதனால் மட்டுமே அதை இத்தனை துல்லியமாக பதிவு செய்யமுடியும் என்று எனக்குத் தோன்றியது.

என் யூகம் சரியே என பின்னர் அறிந்துக்கொண்டேன். ஜெயமோகனும் நானும் ஒரே கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர்கள். அவரது பல கதைகளுக்குக் களமாக அமைந்துள்ள இந்த கிராமம் தற்போது சுற்றுலா தலமாக மாறிவிட்ட திர்பரப்பு அருவிக்கு மிக அருகே உள்ளது. ஒருகாலத்தில் இந்தப் பகுதி முழுவதும் காடுகளால் சூழப்பட்டிருக்கக் கூடும். இப்போது எங்கு பார்த்தாலும் ரப்பர் மரங்கள். ஒருவேளை நான் சிறுவனாக இருந்தபோது பதின்ம வயது ஜெயமோகனைக் கண்டிருக்கக்கூடும். என் சிறுவயது நினைவுகள் பலவற்றை அவரது எழுத்தில் அடையாளம் கண்டுக்கொள்வது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. ஒரு கட்டுரையில் (சங்கச்சித்திரங்கள்) தன் இளமைக் காலத்தில் ஊரில் நடந்த ஒரு கிராமத்து 'சர்க்கஸ்' குறித்து விவரித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒரு வித்தைக்காரன் நிலத்தில் கால் படாமல் ஏழு நாட்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்டியதையும் சட்டை அணியாத ஒருவனின் முதுகில் குழல்விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டதையும் என்னுடைய ஐந்தாவதோ ஆறாவதோ வயதில் மிகுந்த வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் நினைவிருக்கிறது.

காடு நாவலை வீட்டிற்கு எடுத்துவந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் (லங்காதகனம் கதையில் எந்த வேஷக்குறையும் இல்லாமல் ஆட வரும் ஆசானைப்போல) சித்தரிக்கப் பட்டிருந்தன. குறிப்பாக கிரிதரனுடன் காட்டில் வசிக்கும் குட்டப்பன், குரிசு, ரெசாலம் போன்ற பாத்திரங்கள். "குறுக்கில ஒரேபோக்கு நொம்பலம். வல்ல சோக்கேடுங் காணும்" என்று பேசும் இப்பகுதி மக்களின் வட்டார வழக்கின் நெளிவுசுளிவுகளை குமரி மாவட்டத்துக்காரர்களான சுந்தர ராமசாமியாலோ நாஞ்சில் நாடனாலோ கூட பதிவு செய்யமுடியாது. (மேற்படி வசனம் புரியாதவர்களுக்கு: "முதுகில் தீராத வலி. ஏதாவது நோயாக -சுகக்கேடு- இருக்கலாம்"). இளம்வயது கிரிதரன் சில இடங்களில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் கதை சொல்லுவதுபோல் தோன்றினாலும், உண்மையில் அவன் மூத்து நரைத்து கிழவனான பின்பே கதை சொல்லப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. காடு என் ஆவலைத் தூண்டிய பிறகு வாசித்தது ரப்பர் நாவல். ஜெயமோகனின் முதல் நாவலான இது காடு போலவே குமரிமாவட்டத்தின் மேற்குப் பகுதியை (திருவட்டார், திர்பரப்பு, குலசேகரம்..) களமாகக் கொண்டது. என் பார்வையில் இந்த நாவலில் ஜெயமோகனின் சார்புநிலைகள், கோட்பாடுகள் எல்லாம் அதிகமாக வெளிப்படுகின்றன. ரப்பர் நாவல் குறித்த என் புரிதலை அடுத்தப் பகுதியில் எழுதுகிறேன்.

சில எழுத்தாளர்களைப் படிக்கத் தொடங்கினால் நிறுத்தமுடியாதென்று சொல்வார்கள். ஜெயமோகன் விஷயத்தில் எனக்கு அப்படித்தான் ஆனது. அவரது நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் குறுநாவல் தொகுதியையும் விரைவிலேயே வாசித்து முடித்தேன். பெரும்பாலானவை பிடித்திருந்தன. சில சிறுகதைகள் மறக்கமுடியாதவை. சொல்லியே ஆகவேண்டிய ஒன்று டார்த்தீனியம். இந்த கதையைப் படிக்கும் எவருமே பாதிப்படையாமல் இருக்கமுடியாது என்பது என் எண்ணம். மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழும் ஒரு சிறுக் குடும்பம் அந்த குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் ஒரு விடுபட இயலாத இச்சையின் (obsession) காரணமாக எப்படி சிதிலமடைந்து சின்னாபின்னமாகிறது என்பது தான் கரு. ஆனால் இது பாசமலர் பாணி tear jerker எல்லாம் இல்லை. ஒரு மிகப்பெரிய சோகத்தை மிகநுட்பமான முறையில் சொல்லியிருப்பார். மிகவும் கவர்ந்த இன்னொரு கதை "பிரம்ம சங்க்யா" நம்பூதிரியைப் பற்றிய ஜகன் மித்யை என்ற சிறுகதை. நீட்சே, ஐன்ஸ்டீன், ஜடத்தையும் காலத்தையும் இணைக்கும் சமன்பாடுகள், சுழற்சித் தத்துவம் போன்ற விஷயங்கள் கதையில் இடம்பெற்றிருந்தாலும் இவற்றில் பயிற்சியில்லாதவர்கள் கூடப் ஆர்வத்தோடு வாசிக்கும் வகையில் கதை எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை மாடன் மோட்சம். ஒருபக்கம் மதமாற்றங்களினாலும் இன்னொரு பக்கம் சமஸ்கிருதமயமாக்கலாலும் அடித்தட்டு மக்களின் சிறுதெய்வ வழிபாடு அழிந்து வருவதாகச் சித்தரிக்கும் கதை. ஜெயமோகன் ஒரு இந்துத்துவாதி அல்ல என்று நிறுவ முனைவோர் இன்றளவும் சுட்டிக்காட்டும் கதை இதுதான்.

சுந்தர ராமசாமியின் சில கதைகளில் காணப்படும் அங்கதம் ஜெயமோகன் எழுத்தில் பொதுவாக காணமுடிவதில்லை. ஆனால் மடம் என்ற குறுநாவல் இதற்கு சற்று விதிவிலக்கு எனலாம். மாட்டு வைத்திய புத்தகம் ஒன்றைப் படித்து "ஞானம்" பெற்ற ஒரு பனையேறி சாமியாரைப் பற்றிய கதை. சாமியார் மிகப்பெரிய ஞானி என நம்பும் கனபாடிகள், சாமியார் மறைந்த பிறகு அவர் ஞானம் பெறக்காரணமான ஆதார நூல் எது என்றுத் தேடி அலைகிறார். சாமியாரின் பூர்வாசிரம மனைவியான கிழவிக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து அவளிடமிருந்து ஆதார நூல் பற்றிய ரகசியத்தை அறிய கனபாடிகள் முயல்வதும், அவருடைய கேள்விகளுக்கு கிழவியின் பதில்களும் ("என்னெளவ படிச்சானோ? எந்த அம்மெதாலி அறுத்தானோ?") அந்த தேடலின் பின் உள்ள அபத்தத்தை வெளிப்படுத்துகின்றன. படுகை, லங்காதகனம், மண், கிளிக்காலம் போன்ற வேறு சில சிறுகதைகளும் மறக்கமுடியாதவை.

காடு மற்றும் ரப்பர் நாவல்கள் எனக்குப் பிடித்திருந்த அளவிற்கு, ஜெயமோகன் தன் நாவல்களில், ஏன் தமிழில் இதுவரை எழுதப்பட்ட எல்லா நாவல்களிலும், முதன்மையானதாக அடையாளம் காட்டும் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவை என்னை அவ்வளவாக கவரவில்லை. உண்மையில் இவ்விரண்டு நாவல்களில் விஷ்ணுபுரம் மட்டுமே முழுமையாகப் படித்தேன். சில பகுதிகள் பிடித்திருந்தன. பின் தொடரும் நிழலில் சில பக்கங்கள் மேய்ந்துவிட்டு வேண்டாமென விட்டுவிட்டேன். காடு, ரப்பர் ஆகிய நாவல்கள் ஜெயமோகன் நன்கறிந்த மண்ணையும், மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் சொல்வதால் அவற்றில் ஒரு உயிர்த்தன்மை இருக்கிறது. ஆனால் பௌராணிக/அரசியல் சாயல் கொண்ட அவரது பெருநாவல்கள் அவர் கண்டோ, வாழ்ந்தோ அறியாத, அவரது கற்பனையில் மட்டுமே உருவான களங்களையும் (விஷ்ணுபுரம், ஸ்டாலின் கால சோவியத் ரஷ்யா), மனிதர்களையும் பற்றியவை. ஒரு சாதாரண வாசகனாக என் விருப்பம் ஜெயமோகனின் பெரும்பாலான ரசிகர்களிடமிருந்து மாறுபட்டது என்று நினைக்கிறேன். ஜெயமோகன் (அவரே "ஆழிசூள் உலகு" நாவலின் விமரிசனத்தில் குரூஸ் சாக்ரடாஸ் என்ற எழுத்தாளருக்குச் சொன்னது போல்) அவரால் மட்டுமே எழுத சாத்தியமான தென் திருவிதாங்கூர் மக்களின் தனித்தன்மையுடைய வாழ்க்கை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பற்றி நிறைய எழுதவேண்டும். (நினைவுக்கு வரும் சினிமா பாடல்: "அக்கம் பக்கம் பாரையா, சின்ன ராசா! ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா!")

* * * * *

இந்திய தத்துவ மரபில் பயிற்சி உடையவர்களாலேயே விஷ்ணுபுரம் நாவலின் சிறப்பை முழுமையாக உணரமுடியும் என்று ஜெயமோகனும் அவரது ரசிகர்களும் சொல்கிறார்கள். அத்தகைய பயிற்சி ஏதும் இல்லாத எனக்கு அந்நாவல் புரியாமல் போனதில் வியப்பேதுமில்லை. விஷ்ணுபுரத்தின் இறுதிப்பகுதியை வாசிக்கும் போது எனக்கு கபிரியல் கார்சியா மார்கெஸின் "நூறாண்டு தனிமை" நாவலுக்கும் விஷ்ணுபுரத்துக்கும் பரந்த நோக்கில் பார்க்கும் போது சில மேலோட்டமான ஒற்றுமைகள் இருப்பதுபோல் தோன்றியது.

"நூறாண்டு தனிமை" நாவலில் ஒருவித அறிவுதேடலில் ஈடுபட்டிருப்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஜோஸ் ஆர்காடியோ பியுண்டியா என்ற மனிதன் பெயர் தெரியாத ஏதோவொரு ஊரிலிருந்து வந்து மெகாண்டோ என்ற நகரை நிறுவுகிறான். நாவல் பல தலைமுறைகளைத் தாண்டி மெகாண்டோ மற்றும் பியுண்டியாவின் வாரிசுகளின் கதையைச் சொல்கிறது. நாவலின் பின்பகுதியில் மெகாண்டோ சிதிலமடைந்துக் கைவிடப்பட்டநிலையில் இருக்கிறது. இறுதியில் இயற்கைச் சீற்றத்தால் அந்நகரம் அழிகிறது. மெகாண்டோவின் வரலாறும் அழிவும் ஒரு நூலில் ஏற்கனவே முன்னுரைக்கப் பட்டிருக்கிறது. அந்த நூலின் ஆசிரியரும் நாவலில் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். மேலே உள்ளதில் மெகாண்டோவுக்கு பதிலாக விஷ்ணுபுரம் என்றும், பியுண்டியாவுக்கு பதிலாக அக்னிதத்தன் என்றும் போட்டுக்கொள்ளலாம்.

பிரபஞ்ச ரகசியங்களைக் குறித்து ஆராயும் பியுண்டியாவின் ("The earth is round, like an orange") தலைமுறையில் வரும் இறுதி வாரிசு மிருக அம்சத்துடன் (பன்றி வால்) பிறக்கிறது. அதேபோல் பிரபஞ்ச உற்பத்திக் குறித்த தன்னுடைய தத்துவத்தை நிலைநாட்டும் அக்னிதத்தனின் இறுதி வாரிசான தேவதத்தன் மனித அம்சங்கள் ஏதுமின்றி ஒரு தவளை போலவே இருக்கிறான். கோவில் ஓவியங்களிலும் விஷ்ணுபுரத்தின் இறுதி மகாவைதீகன் தவளை போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.

அழிவை எதிர்நோக்கியிருக்கும் மெகாண்டோவில் ஒருக் கட்டத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக சுவர்களில் மோதித் தற்கொலை செய்துக் கொள்கின்றன. (இது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுடன் தொடர்புடைய ஒரு குறியீடு என்று எங்கோ படித்த நினைவிருக்கிறது) ஊரில் உள்ளவர்கள் இறந்த பறவைகளைத் தூக்கி ஆற்றில் கொட்டுகிறார்கள். ஊர் பாதிரியார் அது பிரளயத்துக்கான அறிகுறி என்கிறார். விஷ்ணுபுரத்திலும் அதேபோல் பறவைகள் கூட்டம் கூட்டமாக சுவர்களில் மோதித் தற்கொலை செய்துக் கொள்கின்றன. எடுத்து ஆற்றில் போடுகிறார்கள். ("சாஸ்திரப்படி சோனாவில் கொட்டவேண்டும்"). பண்டிதர் அது பிரளயத்தின் அறிகுறி என்கிறார்.

நூறாண்டு தனிமையில் வினோதமான உருவம் கொண்ட ஒரு கன்றுக்குட்டி அழிவுடன் தொடர்புடையதாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரத்திலும் அழிவுகாலத்தில் இதேபோல ஒரு அசாதாரண உருவம் கொண்ட ஒரு கன்றுக்குட்டியின் பிறப்பு ஒரு குறியீடு போல் சொல்லப்பட்டிருப்பதை வாசித்த நினைவிருக்கிறது.

மேலே உள்ளவற்றை வெறுமனே தகவல் சுவாரசியத்துக்காகத் தான் இங்கே தந்திருக்கிறேன். மற்றபடி காவ்யா விஸ்வநாதன் அளவுக்கெல்லாம் ஏதும் இல்லை. மார்க்கெஸும் ஜெயமோகனும் தத்தம் நாவல்களில் சொல்ல வந்த விஷயங்கள் வேறுவேறானவை. உண்மையிலேயே ஜெயமோகனிடம் ஒரு மேற்கத்திய எழுத்தாளரின் பாதிப்பு இருக்கிறதென்றால் நான் அறிந்தவரையில் அது தாஸ்தாவெஸ்கி தான். கரமசோவ் சகோதரர்களை மூன்று முறைப் படித்ததாக ஜெயமோகன் ஒரு புத்தக முன்னுரையில் சொல்கிறார்.

மனித மனத்தின் செயல்பாடுகளை மிக நுட்பமாகச் சித்தரிக்கும் தாஸ்தாவெஸ்கி பாணியே ஜெயமோகன் படைப்புகளிலும் சிறப்பம்சமாக இருக்கிறது. தாஸ்தாவெஸ்கிக்கு ஒருவிதமான நரம்புச் சிக்கல் இருந்ததும் அதை அவருடைய பல படைப்புகளிலும் வெளிப்படுத்தியிருப்பதும் (எ.கா. குற்றமும் தண்டனையுமில் ராஸ்கால்னிக்கோவ், கரமசோவ் சகோதரர்களில் இவான் கரமசோவ்) நன்கு அறியப்பட்ட ஒன்று. ஜெயமோகனின் உணர்ச்சிகரமான எழுத்துமுறையைப் பற்றி "இது ஒருவகையான நரம்புச் சிக்கல்" என்று சுந்தர ராமசாமி சொன்னாரென்றும் அது உண்மை தான் என்றும் அவரே சொல்கிறார்.

தாஸ்தாவெஸ்கியின் பல கதாபாத்திரங்கள் மீது அவர்களது மனமே மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துகிறது. கரமசோவ் சகோதரர்களில் வரும் டிமிட்ரி மற்றும் இவான் ஆகியோர் ஒருவிதமான குற்ற உணர்வினால் பெரும் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். விஷ்ணுபுரத்தில் வரும் பிங்கலன், சங்கர்ஷணன் போன்ற பாத்திரங்களும் இதேப்போன்ற அவஸ்தையில் உழல்வதைக் காணலாம். தாஸ்தாவெஸ்கி சிறுவயதில் தன் கொடுமைக்கார அப்பாவின் மரணத்தை ரகசியமாக விரும்பியதாகவும், பின்னால் அவருடைய அப்பா மோசமான முறையில் இறந்தபிறகு மிகுந்தக் குற்றவுணர்வு அடைந்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். பிராய்ட் இதைப் பற்றி ஒருக் கட்டுரை எழுதியிருக்கிறாராம். (நூலகத்தில் தேடிப் பார்த்தேன். கிட்டவில்லை.) தன் தகப்பனின் கொலைக்குப் பின் இவான் (அவரது மரணத்தை விரும்பியதற்காக) அடையும் குற்றவுணர்வை தாஸ்தாவெஸ்கி மிகத்துல்லியமாகச் சித்தரித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஜெயமோகனின் ஒரு பெயர் நினைவில்லாத (குழந்தையை 'அப்பா' என்றுச் சொல்ல வைக்க முயலும் தகப்பன் பற்றிய) சிறுகதையில் இதேபோல அப்பாவின் மரணத்தை ரகசியமாக விரும்பி அதனால் குற்றவுணர்வடையும் பாத்திரம் வருகிறது. விஷ்ணுபுரத்தில் சங்கர்ஷணன் தன் மகனின் மரணத்தை தான் விரும்பியதாக நினைத்துத் தன்னை வதைத்துக் கொள்கிறான்.

தாஸ்தாவெஸ்கி அறிமுகப்படுத்தும் மனித மனத்தின் வினோதங்களில் ஒன்று, மற்றவர்கள் தன்னைப் பார்த்து அருவருத்து முகம் சுழிப்பதுபோல் பேசவும் நடந்துக்கொள்ளவும் செய்து அதன் மூலம் ஒருவிதமான இன்பம் அடையும் மனிதர்களைப் பற்றி. (எ.கா. பியோடர் கரமசோவ் மற்றும் குற்றமும் தண்டனையுமில் வரும் மெர்மலடோவ்) கொஞ்சம் யோசித்தால் இதுபோன்ற மனிதர்களை நாமும் சந்தித்திருக்கிறோம் என்பது தெரியவரும். ஜெயமோகனின் ரப்பரில் வரும் குளம்கோரி பாத்திரம் இத்தகையதே. பின் தொடரும் நிழலில் ஒரு கடிதத்தில் பின்வரும் பொருளுடைய ஒரு வரி வருகிறது (நினைவிலிருந்து எழுதுகிறேன். சொற்கள் சற்று மாறியிருக்கலாம்): "மற்றவர்களை தன்னைப் பற்றி இழிவாக எண்ணவைத்து அதில் சுகம் அடைபவர்கள் இருக்கிறார்கள். தான் உண்மையிலேயே இழிவானவன் அல்ல. அது ஒரு தோற்றம் மட்டுமே என்று ரகசியமாக அறிவதிலிருந்தே அந்த சுகம் வருகிறது".

தாஸ்தாவெஸ்கியின் எழுத்தில் கடவுளும் ஆன்மீகமும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். மனிதன் கடவுள் நம்பிக்கையை இழந்தால் தனது அனைத்து நல்லியல்புகளையும் ஒழுக்கநெறிகளையும் இழந்து "அனைத்தும் அனுமதிக்கப்பட்டதே" என்ற மனநிலைக்கு வந்துவிடுவான் என்று தாஸ்தாவெஸ்கி நம்பினார். ஜெயமோகனுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பது போல தான் தெரிகிறது. சுனாமியின் போது மத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே மீட்பு பணியில் இறங்கினார்கள் என்று அவர் எழுதியதைச் இங்கே சுட்டலாம்.

நல்லவேளை வைரமுத்து, அப்துல் ரகுமான் போல ஜெயமோகன் தி.மு.க ஆதரவாளராக இல்லை. இருந்திருந்தால் கழக மேடைகளில் "தென்னாட்டு தாஸ்தாவெஸ்கி அண்ணன் ஜெயமோகன் அவர்களே!" என்ற விளியை நாம் கேட்கவேண்டியிருந்திருக்கும்.

http://kaiman-alavu.blogspot.in/2006/07/1.html

No comments:

Post a Comment