Thursday, September 24, 2015

சக்தி பிரகாஷ் கடிதம்

<a href="http://www.jeyamohan.in/wp-content/uploads/2015/09/kadu2.jpg"><img src="http://www.jeyamohan.in/wp-content/uploads/2015/09/kadu2.jpg" alt="kadu2" width="160" height="253" class="aligncenter size-full wp-image-78966" /></a>

அன்புள்ள ஜெயமோகன்,


‘காடு’ நாவல் வாசிப்பின் அனுபவத்தை நான் பின்வருமாறு தொகுத்துள்ளேன்.


‘காடு’ நாவல் படிக்க ஆரம்பித்ததுமே மிளா என்ற பெயர் என்னை வசீகரித்து உள் இழுத்தது. மிளா என்ற ஒரு விலங்கின் பெயரை முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு அத்தியாயமாகப் படிக்கப் படிக்க காடு எனக்குள் விரிந்து கொண்டே சென்றது. காட்டிற்குள் என்னை இழுத்துச் சென்று வீசியது காஞ்சிர மரம் மற்றும் அதில் வாழ்ந்த வன நீலியின் கதை. அந்த அத்தியாயம் ஒரு அடர்த்தியான, கனமான நிகழ்வாக என்னுள் நீடித்திருக்கிறது.


கிரிதரன் ஒவ்வொரு முறை காட்டிற்குள் செல்லும் போதும் நானும் கூடவே பயணித்தேன். மலையத்தியைப் பார்த்த பிறகு, காடு எனக்குள் தீவிரமாகவும், நெருக்கமாகவும், அழகாகவும் ஆகத் தொடங்கியது. ஒவ்வொரு மரங்களையும், புதர்களையும், மலையையும், அங்கிருந்து வரும் காற்றின் குளிரையும், உஷ்னத்தையும் மெதுவாகக் கவனித்து உணர்ந்த படியே இருந்தேன்.


முதன் முதலாக மலையத்தியைப் பார்க்கச் செல்லும் போது வந்த யானைக்கூட்டம், இடையில் வரும் பாறைகள், சுற்றி இருந்த மரங்கள், பறவைகளின் சத்தங்கள், பாறைகளின் ஊடாக வழியும் அருவி, அதனை ஒட்டிய காட்டின் உள் இருந்த பலா மரம், பலாச்சுளைகள் இவை பெரும் மன எழுச்சியை, குதூகலத்தைத் தந்தன.


மலையத்தியின் அழகு என்னை மயக்கி விட்டது. அவளின் கருமை நிறம் என்னை ஆட்கொண்டு விட்டது. அந்தக் காட்டில் அவள் பேரழகியாகத் தெரிந்தாள். அவள் வாழும் சந்தனக் காடு, மரத்தின் மேலிருக்கும் அவளின் குடிசை, அதன் மேல் முளைத்திருக்கும் சிறு செடிகள் ஒரு குளிர்ச்சியைத் தந்தன. மறைந்திருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், தண்ணீர் எடுக்க அவள் வெளியே வரும் போதும், அவளை அங்கே காணும் போதும் உச்ச கட்ட உற்சாகம் பெருகியது.


அவள் பெயர் நீலி என்று அறிந்ததும், வன நீலியின் உக்கிரத்தை ஏற்கனவே அறிந்திருந்ததால் ஒரு விலகல் ஏற்பட்டது. அவள் நெருங்கி வர வர அந்த விலகல் மெதுவாக மறைந்தது. வேங்கை மரத்தின் அருகே உள்ள பாறையில் அவளை தினமும் சந்திக்கலாம் என்று அவள் சொல்லிய பின், தினமும் அந்தப் பாறைக்கு வந்து காத்திருந்து, அங்கே அவளை ஒரு நாள் கூட பார்க்க முடியாமல் போன பிறகு, மீண்டும் அவளை அவள் வீட்டின் அருகில் சந்தித்த நிகழ்வு காதலை மேலும் அதிகப்படுத்தியது. கிரிதரனும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் இருவர் கண்களிலும் காதல் கண்ணீராகப் பொங்கி வழிந்த அந்தத் தருணத்தில் காடு காதலில் மிதந்தது. அங்கே காதல் துளிர் விட்ட பிறகு, காடு மிகவும் அழகாகவும், மனதிற்கு மிக நெருக்கமாகவும் தெரிய ஆரம்பித்தது. அந்தக் காதல் காடு முழுவதும் பரந்து பரவியது. அடர்ந்த மரங்களையும், உயர்ந்த மலைகளையும், புல் வெளிகளையும், புதர்களையும், பற்பல விலங்குகளையும், பறவைகளையும் கொண்ட அந்தக் காடு மற்றும் அங்கே துள்ளி ஓடி வாழ்ந்து கொண்டிருந்த மலையத்தி நீலியையும் தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியவில்லை.


அப்போது அவள் “கொந்ந ஞாக்கு இஷ்டம், ஞிங்ஙக்கு இஷ்டமா?” என்று கேட்கிறாள்.  அவள் காதலை முதன் முதலாக வார்த்தையில் வெளிப்படுத்திய தருணமாக உணர்ந்தேன். அவளுக்கு அந்தரங்கமாகப் பிடிக்கும் விஷயத்தை அவள் அவனிடம் சொல்லி அவனுக்கும் அது இஷ்டமா என்று கேட்கிறாள். அதை அவள் யாரிடமும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. மனதிற்கு நெருக்கமான ஒருவரிடம் மட்டுமே அதைச் சொல்லத் தோன்றும். அந்தக் கேள்வி கிரிதரனுக்கு முக்கியமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவளுடைய காதலை அவள் அந்தத் தருணத்தில் மிக அழகாக வெளிப்படுத்துகிறாள்.


சில அத்தியாயங்கள் என்னை மிகவும் வேகமாகவும், படபடப்பாகவும் உள்ளே இழுத்துச் சென்றன. படித்து முடித்ததும் அவை ஒரு வித மலைப்பையும், ஒரு ஈர்ப்பையும் கொண்டிருந்தன. அந்த அத்தியாயங்களை இரண்டாவது முறை வாசிக்கும் போது அந்த ஈர்ப்பு முழுவதும் மறைந்து சாதாரணமாக ஆகியது.


அவளின் குறும்பும், துள்ளலும், சிறு பதட்டமும் ஒவ்வொரு நாளும் அவளைச் சந்தித்து அவளின் இருப்பை அனுபவிக்கத் தூண்டியது. அவளின் மலையாளம் கலந்த மொழி அவளைப் பற்றிய கற்பனையை மேலும் அழகாக்கியது. அந்தக் காலங்களில் காடு ஒரு தோரணமாகக் குளிர்ந்து வரவேற்றுக் காத்திருந்தது.


காட்டின் மழைக்காலம் மாபெரும் அனுபவமாக இருந்தது. மழைத்தாரைகள் காட்டிற்கு மேல் ஒரு காடு போல வளர்ந்து நின்று கொண்டிருக்கும் காட்சி ஆனந்த அனுபவம். அங்கே நீலி கிரிதரனைத் தேடி குடிலுக்கு வந்தது அந்த ஆனந்தத்தின் உச்சம். ஓடி வந்து அருகில் அவள் நிற்கும் தருணத்தில் அவள் மேலான என் காதல் உச்சத்தை அடைந்தது. மழையில், காட்டாற்றையும், சாய்ந்து விழுந்து கிடக்கும் பெரு மரங்களையும் கடந்து அவள் அவனைக் கூட்டிச் செல்லும் நிகழ்வு அவனுக்குக் கிடைத்த மாபெரும் வரம். அவள் வாழும் இடத்தில் அவள் அனுபவங்களை கிரிதரனுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள். குறிஞ்சி மலர்களைக் காணும் வரை ஒவ்வொரு காட்சியும் மனக் கிளர்ச்சியை அளித்தன. அங்கே மலை உச்சியில் ஏழம்மைகளை அவள் வழிபடும் காட்சியில் அவளுடைய அதிகபட்ச அழகைக் கண்டேன். முடிகள் காற்றில் ஆட வெண்ணிற உடையில் அவள் நிற்கும் காட்சி என்னுள் என்றும் மறையாது.


காடு மற்றும் அங்கு வாழும் வாழ்க்கை ஒரு கனவாகவும், நகர வாழ்க்கை நிகழ் எதார்த்தமாகவும் தெரிந்தது. நகர வாழ்க்கையில் நுழையும் போது ஒரு வித சலிப்பு ஏற்பட்டது. மீண்டும் கிரிதரன் காட்டிற்கு வரும் போது கனவு மீண்டு மனம் உற்சாகம் கொண்டது. காட்டின் பிரம்மாண்டத்தையும், சிறு இலைகளையும், மரத்தின் நிழல்களையும், நீலியையும் தேடி ஏக்கம் கொண்டது.


அய்யர் பங்களாவில் நீலியும், அவள் தந்தையும் பூஜை செய்யும் போது, ஒரு வித பதட்டமும், உற்சாகமும் கலந்த மன நிலையில் கிரிதரனுடன் சேர்ந்து நானும் அமர்ந்திருந்தேன். இலை வெட்ட அவளுடன் செல்லும் போது அவள் இருப்பைத் தவிர எதையும் அறியவில்லை.


பல இடங்களில் உங்கள் எழுத்தாளுமையைக் கண்டு வியந்தேன். நீங்கள் பயன்படுத்தும் உவமைகள் காட்டின் காட்சியை நுணுக்கமாகக் மனக்கண் முன் விரித்து வைத்தன.  காட்டின் இயல்பை உங்கள் மொழியில் உணர்ந்தேன். பாறையில் கிரிதரன் அமர்ந்து அதன் மேல் கிடந்த சில கொட்டைகளை நீரில் எறிவான். அந்தக் கொட்டைகள் நீரில் செல்லும் காட்சி. “மூழ்கி எழுந்து மிதந்து அருவியில் விழுந்து அப்பால் எழுந்து சென்றன”. இந்த வாக்கியம் காட்சியை உள்ளபடியே கண் முன்னால் நிறுத்துகிறது. “மூழ்கி எழுந்து மிதந்து” மற்றும் “அருவியில் விழுந்து அப்பால் எழுந்து”. இந்த வார்த்தைகளையும் அது கண் முன் நிறுத்திய காட்சியையும் பல முறை நினைத்து நினைத்துக் களிப்புற்றேன்.


நீலியின் பின்னால் குறிஞ்சி மலர் தேடிச் சென்ற பயணம், காதல் நிரம்பிய உற்சாகப் பயணம்.

அவள் பாதங்களுக்கு சிலம்பணிவித்த நீர்ச்சுழிப்பெருக்கு. நான் ரசித்து அனுபவித்த காட்சி.


காடும் நீலியின் காதலும் கனவாக விரிந்து செல்கையில் இந்தக் கனவு ஒரு எல்லையில் முடிந்து விடும். ஆனால் முடிவில் நீலியின் காதல் சோகத்தில் முடிந்து விடுமோ என்ற அச்சத்தை கிரிதரனின் நிகழ் நகர வாழ்க்கை ஏற்படுத்தியது. அந்தக் கனவு ஒரு அழியா ஆனந்தமும் இனிய நினைவாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று மனம் தவித்தது. விஷக் காய்ச்சலில் அவள் இறந்த செய்தியால் நான் நிம்மதி அடைந்தேன் வருத்தம் வரவில்லை. அவள் காதலுடன் இறந்து விட்டாள். அவள் காதல் அழியவில்லை.


அவளுடைய இருப்பிடமும், சந்தனக்காடும் தீ வைத்து அழிக்கப்பட்ட பின் கிரிதரனுக்கு அவள் பழைய காட்சிகளின் ஒரு பகுதியாக மாறிப்போனாள். ஆனால் எனக்குள் அந்த அழிக்கப்படாத காடும், பெரு மரங்களும், காட்டின் தொடர் மழையும், இலைகள் விழும் காட்சிகளும், உயர்ந்த மலைகளும், பாறையில் விழும் அருவிகளும், நீலியின் அழகும், அவளின் நிறமும், காதலும், துள்ளலும், அவள் உச்சரிப்பின் ஒலிகளும் மறையாமல் நீடித்திருக்கின்றன.


“காடு” நாவலில் எனக்குத் தேவையானதை மட்டும் நான் எடுத்துக் கொண்டேன். நான் கண்டவை காடும், நீலியின் அழகும், அவள் காதலும் மட்டுமே. படிக்கும் போது நான் அனுபவித்ததில் நூறில் ஒரு பங்கை மட்டுமே என்னால் இங்கு எழுத்துக்களில் தொகுக்க முடிந்தது.


நன்றி.


அன்புடன்,

சக்தி பிரகாஷ்,

கோபிசெட்டிபாளையம்.

அன்புள்ள சக்தி பிரகாஷ்

காடு வாசிப்பனுபவம் கண்டேன்.

காடு எழுதும்போது என் முன் இருந்த எண்ணம் ஒன்றே. அகக்காட்டை புறக்காடு வழியாகச் சொல்ல முடியுமா என்பது. சங்கப்பாடல்கள் அடைந்த அந்த ஒருமை. அடைந்தேன் என முடிந்தபோது தோன்றியது

கடிதங்கள் மீண்டும் மீண்டும் அதை உறுதிப்படுத்துகின்றன

ஜெ


<a href="http://kaadunoveldiscussions.blogspot.in/">காடு அனைத்து விமர்சனங்களும் </a>

Thursday, June 4, 2015

காடு- கோபு விமர்சனம்


எத்தனை நாட்களுக்குள் படித்தேன் என்று தெரியாது . டிவியை ஆன் செய்து எத்தனை நாட்கள் ஆயிற்று என்றும் தெரியாது . பார்சிலோனா விளையாடும் கால்பந்து ஆட்டங்கள் நடக்கும் நாட்களை தவிர தொ.கா எனக்கு முக்கியமான பொருளாகவே படவில்லை . அரபு நாட்டில் , தனி அறையில் டிவி மட்டுமே பேசிக்கொண்டிருந்த என் அறையில் இது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை . பாலைவனத்தை பறந்து கடந்து மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் புகுந்துவிட்டேன் . கீரக்காதனோடும் , மிலாவோடும் , அயனி மரத்தோடும் வாழத்தொடங்கிய அற்புத நாட்கள் இவைகள் . சந்தனமர காடுகளில் அலைந்து திரிந்து , காட்டாற்றில் குளித்து முழுகி நீலியோடு சுற்றி திரிந்த அற்புத காலங்கள் . இங்கு ஜெயமோகனும் இல்லை , கிரியும் இல்லை . மனிதர்களில் நீலி மட்டும்தான் இருக்கிறாள் ..  

புதுத்தாளின் வாசனையோடு விஷ்ணுபுரமும் , கொற்றவையும் வா வா என்று அழைத்தாலும் , சில நாட்களுக்கு எதையும் படிக்க கூடாது என்று மனம் மன்றாடுகிறது . நல்ல உணவு (பிடித்த உணவு ) ஒன்றை சாப்பிட்ட பிறகு வேறு எதையும் சாப்பிட்டு வாயை கெடுத்துக்கொள்வது மடமை என்கிறது.

சிலவரிகள் உலுக்கிவிட்டன, வேறெங்கோ கொண்டு சென்று விட்டன  என்பது உண்மை . பாதை போட்டு மரங்களை வெட்டி , காடுகளை அழிக்க சிலர் வந்ததும் மனம் வேறொங்கோ சென்றுவிட்டது . காடுகளை வெட்டி அழித்து காடுவெட்டி என்ற பட்டபெயர்களை பெருமையாக சுமந்து நிற்கிறது தமிழகம்(வன்னியர் , தஞ்சை கள்ளர் களில் இந்த பட்டப்பெயர் உண்டு). மலை காடுகளே மயக்குகிறதே ..வேங்கடம் முதல் குமரி வரை அன்று சமதள நிலபரப்பில் காடுகள் நிறைந்து இருந்திருக்குமே.. அது எவ்வளவு அழகாக  இருந்திருக்கும் என்ற ஏக்கம் தொற்றிக்கொண்டது   . கடல் தொடும் ஆசையில் காவிரிக்கு பலகால் முளைத்த தஞ்சை மண் பெரும் வனமாக இருந்திருக்கும் . வண்டல் மண்ணில் அடர் காடு இருந்திருக்கும். கீரக்காதனின் முன்னோர் நிலம் அது . எல்லாவற்றையும் அழித்தாகி விட்டது . மலைகளில் மட்டுமே ஒட்டிகொண்டிருக்கும் பச்சையை பிடுங்கவும் ஆரம்பித்துவிட்டோம் . அது ஆரம்பித்து நூறாண்டுகள் கடந்துவிட்டு இருக்கலாம் என்று நினைக்கும் போதே வேதனை தொற்றிகொண்டது .

நகைச்சுவைக்கும் காட்டில் பஞ்சமில்லை .கதை முழுவதும் நகைச்சுவை இழைந்தோடிக்கொண்டிருக்கிறது என்றாலும்  கிரியின் மாமா இறந்த வீட்டில் நடப்பவை அனைத்தும் குபீர் சிரிப்பை வரவழைப்பவை என்று சொல்லவேண்டும் .

கிரியும் , நீலிக்குமான  உறவு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் வேளையில் எல்லாம் தெரிந்த குட்டப்பனுக்கு ஏன் தெரியவில்லை ? ஏன் அவன் நீலி இறந்ததை யாரையோ பற்றி சொல்வது போல கிரியிடம் சொல்கிறான் ? அந்த இடம் நிச்சயமாக ஒட்டவில்லை. எவ்வளவோ சமாதானம் சொல்லிப்பார்த்தும் மனம் கேட்கவில்லை . குட்டப்பனுக்கு தெரியாமலா ? அது எப்படி சாத்தியம் ? இந்த கேள்விக்கு என்னிடம் விடையில்லை ..

இறுதியாக , இதில் ஜெயமோகன் என்ற ஒருவரும் இருக்கிறார்தான் ஆனால் அவரை முன்னிலைபடுத்தி பெரிதாக பேச மனம் இல்லை . எனினும் இரண்டு தசம ஆண்டுகளாக மலையாளமும் தமிழும் கலந்த வினோத பாஷையில் பேசிக்கொண்டிருக்கும் எனக்கு(நாஞ்சில் நாட்டு மொழி போல அல்ல , இது வேறு , தமிழும் மலையாளமும் அதன் இஷ்டத்திற்கு ஒன்றை ஓன்று தழுவி நிற்கும் மொழி, மலையன்களின், நீலியின் மொழி போல இது தனிமொழி , நாக்கின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அமைந்த மொழி  ) இந்த எழுத்துநடை  மிகவும் பழக்கப்பட்ட ஓன்று போல இருந்தது . உடனே குதித்து விட முடிந்தது .அதற்கு நன்றி .   

கோபு      


அன்புள்ள கோபு,

நன்றி

குட்டப்பன் பற்றி ஒரு விளக்கம். ஒன்று, இம்மாதிரியான எழுத்து என்பது தயாராக யோசித்து விடைகளுடன் எழுதுவதல்ல. எழுதும்போது வருவது எதுவோ அது சரியாக இருக்கும். அவ்வளவுதான். குட்டப்பனுக்குத்தெரியவில்லை. ஏன் என்றால், தெரியவில்லை, அவ்வளவுதான். வாழ்க்கையிலும் அப்படித்தான்

வாசகனாக இப்போது சொல்வதென்றால் குட்டப்பன் காடு பற்றி அனைத்தும் அறிந்தவன். ஆனால் மானுட உறவுகளைப்பற்றிய அக்கறை அற்றவன் அல்லது பெரிதாக நினைக்காதவன். அவனைப்போன்றவர்கள் அப்படித்தான். அய்யர் குட்டப்பனின் மறுவடிவம். அவரும் அப்படித்தான் இருக்கிறார்

காட்டில் லட்சக்கணக்கான பறவைகள். அவை எப்படிச் சாகின்றன, என்ன ஆகின்றன? பறவைச்சடலங்களை மிக அரிதாகவே காணமுடியும். அதேபோலத்தான் நீலியும். இயல்பாக சருகு போல உதிர்ந்து மறைகிறாள். அதிலுள்ள கவித்துவம் எனக்கு உவப்பாக இருந்தது

ஜெ

Wednesday, May 6, 2015

காடு சௌந்தர்ராஜன்

 அன்புள்ள ஜெயமோகன்  சார்,

    காடு  கடந்த 15 நாட்களில் வாசித்து முடித்தேன், என் இதனை வருட வாசிப்பு அனுபவத்தில், முதன் முறையாக ஒரு நாவல் வாசித்த பிரமிப்பை இன்று தான் அடைந்தேன், மனதின் வார்த்தைகள் விரலில் வர மறுப்பதால் இந்த கடிதத்தையும் 2-3 நாட்களுக்கு, சிறிது சிறிதாய் எழுதவேண்டும், என்று இருக்கிறேன், முதலில் நாவலின் முடிவுரை பற்றி எழுதிவிடுகிறேன்,  வேன்முரசு விழாவில் கமல் சொன்னதுபோல் கொற்றவையின் முதல் 10 பக்கங்கள், அவருக்கு உணர்ச்சி கொந்தள்ளிப்பை, தந்தது போல், எனக்கு காட்டின் கடைசி 10 பக்கங்கள் மிகபெரிய கொந்தளிப்பை தந்தது. அந்த  எஞ்சினியர் மனைவியை,  கிரிதரன் கூடுவதும், கதவின் பின்னால் நின்று நீலி ''தம்புரானே''   என்று கதறுவதும், நாவலின் உச்சம்.

    அடுத்தது நாவலின் கதா நாயகர்கள்,

     இந்த நாவலில்  3 கதாநாயகர்கள், ஒரு நாயகி

    முதல் நாயகன்,  அதன் மொழி, செறிவான மலைசூழல்  சார்ந்த எதார்த்தமான, பேச்சின்மூலம் அறியப்படும் காட்டின் மொழி,  எனக்கு அதனை சொற்களும் பரிச்சயம் எனினும்,, நகரத்து சூழலில் வளர்ந்த எவருக்கும் புரிந்தும் , எளிதில் மனதோடு ஒட்டி நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும், அழகான மொழி. '' மலை''யாள மொழியிலேயே எழுதப்பட்ட மிகச்சிறந்த தமிழ் நாவல் என்று இதை  தொகுத்துக்கொள்ளலாம்.

<strong>    இரண்டாவதாக , குட்டப்பன், </strong>

    நாவல் நெடுகிலும் வரும் குட்டப்பன் போன்று சகலகலா வல்லவனாக இருக்க விரும்பாத ஆண் இங்கு எவருமில்லை. குட்டப்பனின் கருபட்டி பாயசயமும், காட்டின் அத்தனை விலங்குகள் பற்றிய அவன் அறிவும், பெண்களை கவரும் லாவகமும், வாழ்கை பற்றிய தத்துவ விளக்கமும், காட்டு வாழ்க்கை வாழ தேவையான நுணுக்கங்களும் என பெரிய பட்டியல் அவனுடைய திறமைகள்.

    நாவல் முழுவதும் இவனின் கேலியும் கிண்டலுமான பேச்சு  வெகு லாவகமாக உரையாடல் மூலம் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

    ''ரெஜினாலே, பாயசவெல்லாம் , உனக்கா சுட்டிதானடி  காச்சின்னேன் " என்று கிண்டலாய் வலை விரிப்பதும்,     பைபிளும் கையுமாக  திருயும் குரிசுவிடம் , " நீரு தொடபிடாது , நான் வச்சதுமே, எங்க சாத்தா சாமிக்கி நேந்தாச்சு, ....சாத்தா பிரசாதம் வேய் ....சாத்தானக்கும்....’ என்று கலாய்ப்பதும்,     ரெஜினாலை குறித்து , '' இவளாக்கும் ஏமான் பஸ்டு சரக்கு '' என்பதும்.  சினகம்மையை குறித்து '' இவ வெறும் கினுகினுப்பு தான் ஏமான், வண்டிக்காளைக்க மணியும் அவளுக்க நாக்கும் சமம்.'' ''  என்று பெண்களை பகுத்து அணுகுவதும், கதை முழுவதும் அத்தனை பாத்திரத்திற்கும், பிடித்தமானவனாகவும் , அனைவருக்கும் தோள் கொடுக்கும் நண்பனாகவும். குட்டப்பன் வாசகனின் மனதில் வாழ்நாள் முழுவதும் தங்கிவிட போகும் ஒரு நண்பன்.

<strong>
    அடுத்து கிரிதரன்,
</strong>

    வயசான கிரிதரனின் , இளமைகால நினைவுகள் தான் இந்த நாவலே, மிளா, எனும் காட்டு மானின் கால் தடமும், கிரிதரன் புண்ணியம் என்கிற தன்னுடைய பெயரும், கல்வெட்டில் பார்க்கும் அந்த தருணம்,  நினைவுகள் விரிந்து, விரிந்து, தனது வாழ்வின் அத்தனை, உணர்சிகரமான நேரங்களும் கண்முன்னே தெரிகிறது. சதாசிவ மாமாவிடம், கல்வெர்ட்டு வேலைக்கு சேரும் இள வயது கிரிதரன் முதன் முதலில் காட்டிற்கு வருவதும், ரெசாலம்,சினேகம்மை, ரெஜினா , குட்டப்பன், குரிசு, என்று ஒரு நட்பான சுழல் அமைவதும்,  அயனிமரத்தடியில், அனைவரும் அமர்த்தும், பேசியும் நாட்களை நகர்த்துவதும், அய்யரின் அறிமுகம் மூலம், தத்துவம், சிந்தனை, இசை, கபிலன், காதல் என்று ரம்மியமான  தருணத்தில், மலை வாழ் பெண் நீலி யை முதலில் சந்திப்பதும், காதலா, வெறும் காமமா, என்று தடுமாற்றத்தில் நோய் காண்பதும், நீலியின் காட்டு மர குடிலின் முன் காத்துகிடப்பதும், உருகித் தவிப்பதும், எண்ணிலடங்கா வார்த்தைகள் பேச எண்ணி, ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அவளிடம் சொல்ல முடிவதுமான , மிகபெரிய உணர்ச்சி கொந்தளிப்பு நிலையில் இருக்கும் கிரிதரன் எந்த காலத்திற்குமான ஒரு இளைஞனின் பிரதிபலிப்பே


தனிமையில் காட்டில் மாட்டிகொண்டு பயந்து விடுவதும்,, மீண்டும் உணர்ச்சி மேலீட்டால் காடு நோக்கி இருளில் செல்வதும். இளைஞனின் ரெண்டும்கெட்டான் நிலை. மத்திய வயதில் கடும் வாழ்க்கை சுழலில் கூட, இருண்ட ஒரு அறையில் தங்கிய  படி, சாளரங்கள் வழியாக, பேச்சி பாறையை பார்த்துக்கொண்டே, '' நீர் திகழ சிலம்பு '  என்ற குறுந்தொகை பாடல் எழ, கபிலனா, பானம்பாரனாரா'' என்ற  சந்தேகத்தோடு, திணை குறிஞ்சி  தான், என்று அவன்   சற்று சுழலும், இறுக்கமும், தளர்ந்து, நீலியை யும், அவள் குளிர்ந்த காதலையும் எண்ணிக்கொள்வது,   மனிதனின், இக்கட்டுகளில், கலையும்,இலக்கியமும்,அழகியலும் ஆற்றுபடுதுவது போல் பிறிதில்லை என்றே என்ன வைக்கிறது.

<strong>
    அடுத்தது நாயகி " நீலி" </strong>

    ''தம்புரானே அது மலையன் மகள் தொட்டா சுடும்''- இப்படிதான் அறிமுகப்படுத்தப்படும், நீலி  வெகுளியான , எளிய காட்டு தேவதை போன்ற பெண்,

    ''எந்து நோக்கனு''

    ''நோக்கான் பாடில்ல'' 

    ''மலையத்தியானு'' என்று அவள் பேசும் அத்தனை பேச்சும் குழந்தையின் மழலையும்,

    ''அய்யோ ....ஞங்ங போணும், அச்சன் வரும்''. என்று அவள் கெஞ்சுகையில், இன்னும் சற்று நேரம் இருந்து விட்டு போயேன் என்று தான் நமக்கும் சொல்ல தோன்றும்.

    இப்படி ஒரு எளிய, வெகுளியான  பெண்ணை மனதளைவிலே நிகழ்த்தி வாழ்ந்து பார்க்காத ஆணே அரிது எனலாம்.

    கிரிதரனின் அத்தனை கவித்துவமும், ரசனையும், காமமும், சிந்தனையும், இப்படி ஒரு எளிய தேவதையிடம் மட்டுமே முழுமை பெற முடியும்.

    நாவல் முடிந்த வெகு நாட்களுக்கு பிறகும்  ''தம்புரானே'', தம்புரானே''  என்கிற நீலியின் ஒற்றை சொல்  வெளியெங்கும் ஒலித்துகொண்டிருப்பதை, எவரும் உணரலாம்.

    பிற கதை மாந்தர்களான, ரெசாலம், சினேகம்மை, குரிசு, மாமா, மாமி,  வேணி, அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ரெசாலத்தின் தேவாங்கு,  நண்பனாய், குருவாய்,கலைரசிகனாய், கபிலனாய், பன்முக தன்மை கொண்ட அய்யர். இப்படியாக நீளும் ஒரு வரிசை. அத்தனை பேரும் முக்கியமான பங்கு கொள்ளும் ஒரு களம் தான் காடு..

    ஐஸ்கிரீம்  சாப்பிடும் போது ஒரு உணர்வு உண்டு, கரைந்தும், விடக்கூடாது, சுவைக்காமலும்,, இருக்கக்கூடாது, என்பது போல, கதை படித்துக்கொண்டே செல்லுகையில்,  ஐயோ, முடிந்துவிடுமோ  என்கிற எண்ணமும், முடியக்கூடாதே, என்கிற பரிதவிப்பும்.
    காடு நம்மை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்கிறது.

    நிச்சயமாக மறுவாசிப்பிற்கான  மிகசிறந்த நாவல்

சௌந்தர்ராஜன்

Wednesday, February 4, 2015

ஜெயமோகனின் காடு- கே.ஜே.அசோகுமார்


காமத்திற்கு தேவை தனிமை. உடலும் மனமும் தனிமையில் இருக்கும்போது காமம் விழித்துக் கொள்கிறது. காமமும் காம எண்ணங்களும் தனிமையின் போதே உருக்கொள்கின்றன. காடும் ஒருவகை தனிமைதான். காட்டை ஒவ்வொரு அங்குல‌கமாக உணர்கையில் தனிமையும் அதன் விரியத்தையும் பார்த்தபடி இருப்போம்.


நான் படிக்கும்காலத்தில் என் ஊரில் இருக்கும் ஒரு ரயில் தண்டவாளத்தை தாண்டி படிப்பதற்க்காக‌ செல்லும் ஒரு ஒற்றைப் பாதையில் தாண்டி காட்டையும் அதன் தனிமையை கண்டிருக்கிறேன். அது பெரிய காடு அல்ல ஆனால் ஒவ்வொரு இடமும் மர, செடிகளின் இருப்பும் அடுத்த நாளில் காணமுடிந்ததில்லை. தினமும் மாறிக்கொண்டே இருப்பதுபோன்ற ஒரு பிரம்மை. பெரிய மரங்களையும் அவற்றின் தனிமையையும் காணும்போது அப்போது ஏற்படும் வாழ்வு குறித்த அச்சங்களை, கேள்விகளை எண்ணாமல் இருக்க முடிந்ததில்லை. அம்மரங்களின் கீழே சிவப்புநிற இதுவரை காணாத‌ பல வண்டுகள், பூச்சிகள் இருக்கும். அவைகள் எந்நேரமும் முயங்கிகழிப்பதாக தோன்றும். தினமும் அவைகளை அப்படிதான் கண்டேன். பூச்சிகள், வண்டுகள் குறைந்த மரமாக தேடி அமர்ந்துக் கொள்வேன். படிப்பதைவிட பாதிநேரம் அவைகளின் முயக்கங்களை கவனித்தபடி இருந்திருக்கிறேன். ஆம், காட்டில் தன் எதிரிகளை வெல்வது அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்வது, உணவுதேடுவது, தன் இனத்தைதேடி முயங்குவது இதைத் தவிர வேறு எதுவும் காணமுடியாது.


காடு எப்போது வசீகரிப்பதற்கு காரணம் அதில் எதாவது விலங்கு நம்மை தாக்கலாம் என்கிற எண்ணம், அதில் வழிதவறிப் போய்விடுவோம் என்கிற பதற்றம், என்று நிறைய சொல்லலாம். அதனால் காட்டின் அமைதியும் தனிமையும் நம்மை நிலைக் கொள்ளவைப்பதில்லை. நம் சிந்தனைகளை முழுவதும் அது தன் பக்கமே வைத்திருக்கிறது. ஆகவே ஒவ்வொரு விநாடியும் உயிர்ப்புடன், அதீத விழிப்புடன் நம் மனதில் நிறைந்திருக்கிறது. காட்டிற்கு சென்றுவந்த அந்த நாள் முழுவதும் நிறைந்திருப்பதை நாம் உணரமுடிகிறது.


ஜெயமோகன் எழுதிய காடு நாவலும் படித்தபின் மனிதில் முழுவதும் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் பேசும் எதாவது ஒரு பேச்சாவது நம்மனதில் முக்கியமானதாகப் படுகிறது. காடான இதிலும் காமமும் தன்னை காத்தலும் மட்டுமே வருகிறது. ஒவ்வொரு பாத்திரமும் காமத்தை நேசிக்கிறது. அவர்களின் மனம் காமம் அன்றி வேறு வேலை செய்வதில்லை. அவர்கள் நகர மக்களை அழுகல்களாகவும், சாக்கடை புளுக்களாகவுமே பார்க்கிறார்கள்.


எல்லா பாத்திரங்களும் காமத்தையே பார்க்கின்றன. கிரியின் காமம், வேணியின் காமம், மாமியின் கண்டன் மீதான காமம், மாமாவின் காமம், சினேகம்மையின் அதீத காமம் என்று எல்லா இடத்திலும் காமம் நாவல் முழுவதும் நிறைந்து இருக்கிறது. ஆனால் குட்டப்பனின் வாழ்க்கைக் குறித்த பேச்சுக்கள், அய்யரின் சித்தாந்தப் பேச்சுகள், நாடாரின் வாழ்க்கைப் பார்வை, குரிசுவின் தன் மதம், கடவுள் குறித்த பார்வைகள், நீலியின் காதல் பேச்சுக்கள், என்று வேறுஒரு பக்கமும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது.
கதாநாயகனான கிரி இதையெல்லாம் கேட்டு நாவல் முழுவதும் வாழ்ந்து திரிகிறான். கவிஞனாக, காட்டை ரசிக்கும் கலைஞனாக, தத்துவங்களை கேட்டு வளரும் பதின்பருவத்து கிரி கடைசியில் வாழ்வில் தோற்றவனாகத்தான் மாறுகிறான். தான் நினைத்த காதலி, லெளகீக வெற்றி, கவிஞனாக என எதையுமே அவன் முடியவில்லை. தன் மனைவி வெறுக்கும் சுருட்டை தன் கடைசிகாலத்தில் ஊதித்தள்ளி வெறுப்புக்கு ஆளாகிறான்.
கதையில் அவன் தோல்வியடைந்தவனாக சித்தரிக்கும்போது உண்மையில் அப்படி அவன் தோல்வியடைய முடியாது என்று தோன்றியது. இளமை எண்ணங்களை வைத்து அவன் முதுமையில் பிடிக்கும் இடத்தை ஒரு நேர்க்கோட்டால் இணைத்து சொல்லிவிட முடியவில்லை.


வெற்றியடைய வேண்டிய தன் தெளிவான பார்வை உடையவனாக வரும் கிரிக்கு தோல்வி ஏன் கிடைக்கிறது? தோல்வியடைந்த 42 வயது கிரி அய்யரை ஒரு இடத்தில் சந்திக்கும்போது அய்யர் கூறுவார் உன்னை எல்லோரும் சீராட்டவேண்டும் என நினைக்கிறாய் அதுதான் காரணம் என்று. பருவத்தில் உயர்ந்த மனிதர்களாக நம்மை நினைப்பதும் சராசரியாக சாதாரனமானவனாக பின்னால் சரியும்போது ஏற்படும் அந்த‌ உள்ளச்சரிவுதான் அது என நினைக்கும்போது தான் அந்த சரிவு சரியே என படுகிறது.
சுற்றி வரும் பாத்திரங்களில் கிரியையும்விட பல சின்ன பாத்திரங்கள் அதிக வீரியமாக சொல்லப்பட்டிருக்கிறது. குட்டப்பன், அய்யர், நீலி, சினேகம்மை, அம்மா, மாமி, போன்றவர்களைச் சொல்லலாம். ஆரம்ப பகுதிகளில் முழுவதும் குட்டப்பனே ஆக்கிரமித்திருக்கிறான்.


முதலில் காட்டை விரும்பாத கிரி கொஞ்ச கொஞ்சமாக அதனுடன் வாழக்கற்றுக் கொள்கிறான். அதன் வீரியம், இரக்கமின்மை எல்லாமே வசீகரிக்கிறது. குட்டப்பன் மூலமாக காட்டையும் யானைகளையும், மிளாக்களையும் பற்றி அறிந்துக் கொள்கிறான். இதில் காட்டையும், யானைகளைப் பற்றி சொன்னதுபோல யாரும் நுணுக்கமாக சொன்னதில்லை.
எந்த கதாபாத்திரத்தையும் ஜெ. அதிகமாக வர்ணிக்கவே இல்லை. தமிழக கேரள காட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடைகள் எப்படி இருக்கும் எனபதைப் பற்றி வாசகர்களுக்கு, அதுவும் சராசரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு, அறிய தரவேயில்லை. ஆனால் பாத்திரங்களின் வாயிலாக அவர்கள் பேசும் தமிழ், மலையாள கொச்சை பாசைகளின் மூலமாக வாசகர்கள் கற்பனையாமல் மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.
அம்பிகா அக்கா, மாமி இருவரை மட்டுமே அவர்கள் உடைகளைப் பற்றிய வர்ணனைகளை தருகிறார். நாவல் முழுவதும் வரும் மலையத்தியான நீலியின் உடைகள் எப்படி பட்டவை, அம்பிகா அக்கா மாதிரி முண்டு அணிந்திருக்கிறாரா, மேலே ஜம்பர் அணிந்திருக்கிறாரா என்கிற விவரங்கள் இல்லை. அதுவே நம்மை நீலியைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள ஆவலை தூண்டுகிறது.
கிரியின் அப்பா பற்றி அதிகம் சொல்லப்படவில்லை. ஆனால் டே..ய் என்று அழைத்துக் கொண்டு இருக்கும் அம்மா ஒரு கட்டத்தில் கிரீ என்று விழிப்பதை ஒரு நுண்ணிய அவதானிப்பால் அவர் வைக்கும் பார்வை ஆச்சரியப் படவைக்கிறது. யானை, மிளா போல மற்றொன்று காஞ்சிரமரம், அதைப்பற்றிய வர்ணனைகளும், அதன் பிண்ணனிக் கதைகளும் அதன் கசப்பு போல உள்நாக்கில் படிந்துவிடுகிறது.
மீண்டும் படிக்கும்போது வேறு புதியவைகள் நம் மனதில் படியக்கூடும். அதற்காகவேணும் ஒரு முறை காட்டிற்கு சென்று வரவேண்டும்.