Wednesday, July 23, 2014

காடு -பாலா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
‘காடு’ நாவல் சமீபத்தில் வாசித்து முடித்தேன். ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை எனக்கு அளித்தது. மிக்க நன்றி.
உங்கள் வரிகளில் காடும் காடு சார்ந்த இடங்களும் என்னுள் புது பரிணாமம் பெற்றது. இனி நான் காட்டை நேரில் காண நேர்ந்தால் அங்குள்ள சிறு பூச்சிகளின் ஓசையைக் கூட என் மனம் தவறவிடாது. அணு அணுவாய் ரசிக்கத்தோன்றும். கிரியும் அய்யரும் ரசித்தது போல.
நாவலில் காட்டு வாழ்கையையும் நகர வாழ்கையையும் ஆங்காங்கே ஒப்பிடப்பட்டுள்ளது. அவை காட்டு வாழ்கைக்காக என்னை ஏங்க வைக்கும் வரிகள்.
நாவலில் கவித்துவம் என்பது நான் இது வரை அறிந்திராத ஒன்று. ஆனால் காடு நாவலின் மொழி நடை என்னை பிரமிக்க வைக்கிறது. உவமைகள் அனைத்தும் புதிதாகவும் கதாபாத்திரங்களின் மனவோட்டங்களை என்னுள்ளும் பிரதிபலிக்க ஏதுவாக இருந்தது.
கீரக்காதனும் தேவாங்கும் மனதில் நீங்காத இடம் பிடித்த கதாபாத்திரங்கள். அவர்களின் முடிவு மனதை கனக்க வைத்து.
என்னுடைய ‘favorite hero’ யார் என்று கேட்டால் தயங்காமல் குட்டப்பன் என்று சொல்லுவேன். எனக்கு மட்டும் அல்ல, கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்கெல்லாம் குட்டப்பன் தான் ஹீரோ. குட்டப்பன் ஒரு தனி மனிதன் இல்லை. அவர் வாழும் காட்டின் ஒரு பாகம் என்றே தோன்றுகிறது.
நாவலைப் படித்த பிறகு சங்க இலக்கியம் மேல் ஆர்வம் முளைத்திருக்கிறது. குறிப்பாகக் கபிலரின் வரிகள். கபிலர் கண்ட வனத்தையும் அவர் வர்ணித்த பெண்ணையும் இந்த நாவலின் வழியாக உணர்த்திவிட்டீர்கள். கபிலரைப் படித்து விட்டு, இந்த நாவலை மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.
பல நூறு விஷயங்கள் நாவலைப் பற்றிக் கூற இன்னும் என் மனதில் எஞ்சி இருக்கிறது. அனால் அதைத் தொகுக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறன். அத்தனையும் ஒரு பேரனுபவமாக மனதில் தேக்கி வைத்துள்ளேன்.
மிக்க நன்றி.
- பாலா
அன்புள்ள பாலா
காடு உங்களைக் கவர்ந்தது அறிந்து மகிழ்ச்சி
காடு இயற்கையின் குறியீடு. அதன் தன்னிச்சைகளின் , விதிகளின் அடையாளம். அங்கே இயற்கையாகவே வென்றுசெல்பவனே கதாநாயகன். ஆகவே காடு குட்டப்பனின் கதைதான். குட்டப்பனில் இருந்து வேறுபடும் புள்ளிகளாகவே பிறரை மதிப்பிடவேண்டும்
அவனுடைய மரணமும் ஒரு ‘தூய’ மிருகம்போலத்தான். பெரும்பாலான மிருகங்கள் சாவதில்லை. கொல்லப்படுகின்றன

No comments:

Post a Comment