Tuesday, July 8, 2014

காடு -கேசவமணி

பூமியில் வாழும் பல்வேறு உயிர்களில் காடு ஒரு பேருயிர். அதற்குப் புலன்கள் உண்டு; கண்களும், காதுகளும் உண்டு. அது பார்க்கவும், கேட்கவும், உணரவும் செய்கிறது. அதற்கேயான பிரத்யேகமான குணங்களும், இயல்புகளும் இருக்கின்றன. பல்வேறு உயிரினங்கள் காடுடன் ஓர் இயைந்த தாளகதியில் வாழ்கின்றன. மனிதன் காட்டிலிருந்து வெளியேறி என்று நகரத்திற்குச் சென்றானோ அன்றே காடுடனான அவனது பந்தம் அறுபட்டுவிட்டது. காடு அவனுக்கு அந்நியமாகிவிட்டது. எனவே காட்டின் ரகசியங்களை மனிதன் இழந்துவிட்டான். இதனால் காடு அவனுக்கு அச்சம் தருவதாகவும், புரிந்துகொள்ள முடியாத புதிராகவும் ஆகிவிட்டது. அவற்றுடன் இணக்கமாக வாழும் சாத்தியத்தை அவன் இழந்துவிட்டான். எனவே காட்டின் இயற்கைச் சூழலை சீர்குலைத்து தனக்கான வகையில் காட்டை அழித்து அதை மாற்றும் முயற்சியில் சதா ஈடுபட்டு வருகிறான். அவன் அறிவீனத்தை, அவனுக்கும் காடுக்குமான உறவுவின் சிதைவை, காதலும் காமமும் கலந்து அற்புதமானதொரு புனைவாக நம்முன் விரியச்செய்திருக்கிறார் ஜெயமோகன்.

காடு என்றதும் நம் மனதில் அதைப்பற்றி விரியும் சித்திரங்கள் என்னென்ன? மரங்கள் அடர்ந்த சூரிய ஒளி புகமுடியாத கும்மிருட்டு. தொடக்கமும் முடிவும் அறியமுடியாத புதிர்ப் பெருவெளி. ஏராளமான விலங்குகள், பறவைகள், ஊர்வனவற்றின் இருப்பிடம். இனம் புரியாத அச்சம். குறிப்பாக பாம்புகள், யானைகள் பற்றிய அச்சம். பயத்தையும் தாண்டி அதன் மீது ஒருவகையான ஈர்ப்புணர்வு. இயற்கையின் பேரதிசயம். மனிதன் அதன் முன் சாமானியன் எனும் வியப்பு. அகங்காரத்தை ஒடுக்கித் தன்னை அறியும் ஞானத்தை போதிக்கும் இடம். இப்படி பல்வேறு சித்திரங்களும், உணர்வுகளும் நம் மனதில் எழுகின்றன. இப்படிப் பலவற்றை நாம் காடுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது போலவே மனிதனின் காமத்தையும் இவ்வாறான ஒரு ஒப்புநோக்குடன் நாம் அணுக முடியும். யோசித்தால் காமத்திற்கும் காட்டைப்போலவே இருட்டு, அச்சம், வசீகரம், புதிர், ஆச்சர்யம் மற்றும் தன்னை அறிதல் ஆகிய பல குணாம்சங்கள் இருப்பதைக் காணலாம்.

மனிதனின் ஆதாரத் தேவைகள் இரண்டு. ஒன்று உடலின் தேவை மற்றது மனதின் தேவை. உடலும் மனமும் சமனப்பட முறையே உணவும் காமமும் அவசியம். காமம் என்பது முற்றிலும் உடல் தேவையல்ல மாறாக அது மனத்தின் தேவை. மனத்தின் தூண்டுதல் இன்றி உடலில் காமம் எழ முடியாது. எனவே காமம் மனத்தின் தேவை என்பதுதான் பொருந்தும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இயல்பாக அடையக்கூடிய இதை நம் சமூக அமைப்பு பல காரணங்களால் சிக்கலானதாகவும் சிடுக்கானதாகவும் வைத்திருக்கிறது. மனிதனின் உடல் பசியைப் போலத்தான் காமமும் என்பதை சமூகம் ஏற்க மறுக்கிறது. இப்படி சமூகம் ஒருபுறம் மறுதலிக்க, ஒவ்வொரு மனிதனிடத்தும் காமம் அதன் இயல்பான குணத்திலிருந்து திரிந்து வக்கிரமாக மாறிவிட்டது. எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த காமம் மற்றும் காதலைப் பற்றிய தேடலினூடாக காட்டின் அறிதலாக இருக்கிறது ஜெயமோகனின் காடு.

நாவலின் பல இடங்களில் வெளிப்படும் காடு பற்றிய விவரணைகளும், சித்தரிப்புகளும் காட்டை தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறது. நாம் நிஜமாகவே காட்டில் நுழைந்தாலும் காட்டை இவ்வளவு தூரம் நுட்பமாக உள்வாங்கிக்கொள்ள முடியுமா என்று சந்தேகம் எழுமளவிற்கு ஜெயமோகன் விவரணைகள் துல்லியமாகவும், முப்பரிமாண உருவம் கொண்டும் நம்முன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. கிரிதரன் காட்டில் வழிதவறிவிடும் பகுதிகள் நம்மை காடுடன் மேலும் நெருக்கம் கொள்ளச் செய்கின்றன. காடு நம் அருகே பக்கத்தில் நின்று நம்மைப் உற்றுப் பார்ப்பதான ஒரு பிரமை நாவலை வாசிக்கும் கணம்தோறும் நம்முள் எழுந்தபடி இருக்கிறது. அவன் தூக்கம் வராத ஒரு இரவில் கொட்டும் மழையைப் பார்த்திருப்பதும், காட்டில் சந்தித்த நீலி என்ற மலைஜாதிப் பெண்ணின் உருவம் தான் தங்கி இருக்கும் குடிலில் தன்னோடு இருப்பதாக அவன் உணரும் தருணங்களின் சித்தரிப்புகளும் புனைவின் உச்சம் எனலாம்.

குட்டப்பன், ரெசாலம், குரிசு ஆகிய பாத்திரங்கள் தத்தம் தனித்தன்மையுடன் நாவலின் பக்கங்களில் உலவுகிறார்கள். எப்போதும் சளசளவென பேசுவதின் மூலம் குட்டப்பனும், தன்னுள் இருக்கும் சோகத்தை வெளிக்காட்டாதவராக, அதிகம் பேசாதவராக தேவாங்குடன் மேஸ்திரி ரெசாலமும், கையில் பைபிளுடன் குரிசுவும் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறார்கள். குட்டப்பன் சொல்லும் கதைகளும், பேச்சும் நம் மனதை, நினைவுகளை தொடர்ந்து கிளரியபடியே இருக்கிறது. சிங்கம் அல்ல யானைதான் காட்டுக்கு ராஜா என்றும், பாறையும் மலையும் தெய்வங்கள் என்றும், காடு பற்றிய அவனது இதர சித்தரிப்புகளும் காட்டைப் பல கோணங்களில் நாம் அறிந்துகொள்ள உதவுகிறது. பல்வேறு சமயங்களில் அவனிடமிருந்து வெளிப்படும் மதம் சம்பந்தமான கருத்துகள் நம்முள் புதியதோர் திறப்பை ஏற்படுத்துகிறது. அவன் சொல்லும் இளையராஜா-வனநீலி-காஞ்சிமரம் குறித்த கதை வசீகரமானது. தன் கற்பனையின் திறத்தாலும், மொழியின் இலாவகத்தாலும் அந்தக் கதையை அற்புதமாக இழைத்திருக்கிறார் ஜெயமோகன். குட்டப்பனுக்கும் குரிசுவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் சிறப்பான நகைச்சுவைக்குச் சான்றாக இருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது நாம் புன்னகைக்காமல் இருக்க முடியாது. பாத்திரங்களின் பேச்சு வழக்கின் மொழி நாவலுக்குத் தனித் தன்மையும் அழகையும் சேர்க்கிறது.

ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது உடலில் எழும் உணர்வுகள் காமம் என்றும், மனதில் ஏற்படும் உணர்வுகள் காதல் என்றும் நாம் பொதுவான வரையறைகளை வைத்திருக்கிறோம். ஆனால் ஒன்று மற்றொன்றாக பரிணமிக்கும் கணத்தை நாம் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. நிர்வாணம் என்பது வெறும் காமம் சார்ந்தது மட்டுமல்ல. நிர்வாணமான உடலை நாம் நேரில் காணும்போது நம்மிடம் காமம்தான் பிறக்கும் காதல் பிறக்கமுடியாது என்று சொல்வதற்கில்லை. சொல்லப்போனால் காமம் காதல் இரண்டுமே ஒருவகையான வேட்கைதான். கிரிதரன் இதனாலேயே காமம் காதல் ஆகிய இரண்டுவித உணர்வுகளுக்கு ஆட்பட்டு நிலைகொள்ளாமல் தவிக்கிறான். ஒரு நாள் இரவில் அவன் நீலியைத் தேடி காட்டுக்குள் செல்லும் காட்சிகள் அபாரமான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கிறது. அவன் நினைவினூடே வந்துபோகும் சங்க இலக்கியப் பாடல்கள் அவனோடு சேர்த்து நம்மையும் உத்வேகத்திற்கு இட்டுச்செல்கிறது. வேட்கை உந்தித்தள்ள, மனம் பரபரக்க அவன் அவளைத் தேடி ஓடுகிறான். வாழ்க்கையில் ஏதோ ஒரு வேட்கை எல்லோரையும் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிச் செலுத்துகிறது. பல்வேறு பிரயத்தனங்கள் செய்து ஒன்றை அடையப் போராடுகிறோம். ஆனால் அவற்றை அடைகிறோம் அல்லது அடையாமல் போகிறோம் என்பது அவ்வளவு முக்கியமல்ல. மாறாக அவற்றை அடைவதற்கான தேடல்தான் முக்கியம். தேடலில் கிடைக்கும் பரவசம், கிளர்ச்சி, மனவெழுச்சி இவைதான் நம்மை சதா ஒன்றை நோக்கிச் செலுத்துகிறது என்பதை கிரிதரன் அந்தத் தருணத்தில் உணர்ந்துகொள்கிறான்.

இன்ஜினியர் நாகராஜ அய்யர் அவரது நடத்தையாலும், பேச்சாலும், இலக்கியம் பற்றிய உரையாடலாலும் நாம் மறக்க இயலாத ஒரு பாத்திரமாகிறார். பொதுவாக நாவலில் வரும் சிறிய பாத்திரங்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் இந்நாவலில் அது விதிவிலக்காக அமைந்துவிடுகிறது. எனவே சினேகம்மை, ரெஜினாள், ராசப்பன் ஆகிய பாத்திரங்களும் தங்களுக்கென தனித் தன்மையோடு வந்து நம் மனதில் இடம்பிடித்து விடுகிறார்கள். மிளாவும், தேவாங்கும், கீறக்காதன் என்ற யானையும் கூட நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்திச் செல்வது நாவலின் நுட்பமான கதையோட்டத்திற்குச் சான்று. இவற்றுக்காக ஜெயமோகன் கையாளும் சொற்கள் அதிகமில்லை என்பதும், மிகக் குறைந்த சொற்களில், வாக்கியங்களில் அவர் இதை அனாயசமாக செய்துவிடுகிறார் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது. நாவலில் நிகழ்காலம் கடந்தகாலம் எதிர்காலம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும், பிணைந்தும் தன் போக்கில் இயல்பாக விரிந்து, பரந்து வியாபிக்கிறது.

நாவில் காடுக்கும் அதில் வாழும் விலங்குகளுக்கும் மதம் பிடிக்கும் பகுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வேனில் காலத்திற்குப் பிறகு, மழை தொடங்கும் நாட்களுக்கு முன் காட்டில் உள்ள மிருகங்கள் அனைத்தும் மதம் கொள்கின்றன. சொல்லப்போனால் மொத்த காடு முழுதுமே மதம் பிடித்து, உக்கிரம் கொண்டு ஆடி அடங்குகிறது. காடுகளுக்கும் சரி, விலங்குகளுக்கும் சரி மதம் பிடிக்கவும் அது தணியவும் குறிப்பிட்ட காலம் இருக்கிறது. ஆனால் மனிதன் என்ற மிருகத்திற்கு காமம் என்ற மதம் நாளும் பிடித்தபடி இருப்பதேன்? அதில் சிக்கி பல பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்படுவதை அவன் உணராமல் இருப்பதேன்? மனிதன் என்ற சமூகம் பெண்கள் என்ற காடுகளைச் சிதைப்பதை யார் தடுப்பது? காடுகள் பல வெந்து சாம்பலாவதை எவ்வாறு தணிப்பது? போன்ற பல கேள்விகளை நாவலின் இப்பகுதி நம்முள் எழுப்புகிறது. மனிதன் என்றாவது காடு, மலை, காமம் மற்றும் காதல் இவற்றுடன் சிநேகமாக வாழ முடியுமா என்பது கேள்விதான்.

வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்று நாம் நினைப்பதற்கு மாறாக காரியங்கள் நடந்துவிடுவது. நாம் நினைப்பது நடக்காததை விடவும் அதிக துன்பம் தருவது இது. நீலியிடம் தன்னை முழுதுமாக ஒப்புக்கொடுத்துவிட்ட கிரிதரன், கடைசியில் தன் அழகற்ற மாமா பெண் வேணியைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஆகிறது. நகரத்தின் வாழ்க்கையில் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நீலியின் உருவம் அவ்வப்போது தன் அருகே இருப்பதாக எண்ணி மயங்குகிறான். தன்னை தன்னிடம் மட்டுமே இருத்திக்கொள்ள முடியாத மனிதன் தன்னைப் பிறிதொன்றிடம் ஒப்படைத்துவிடும் முயற்சியாக அவன் நாடுபவைதான் காதல், காமம், கடவுள், கவிதை எல்லாமே. இவைகள் மனித மனத்தின் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி அதீதமாகும் போது மனப்பிறழ்வு ஏற்படுகிறது. இதுவே கிரிதரனுக்கு ஏற்பட, அவன் மனப்பிறழ்வின் விளிம்புக்குச் சென்று மீள்கிறான். காடுகள் தங்கள் பழைய பொழிவையும் வனப்பையும் இழந்துவிட்டது அவனைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. இன்று எங்கும் நிறைந்திருக்கும் நகரங்கள் முன்பு காடுகளாக இருந்தவை என்பதை எண்ணி அவன் மனம் தவிக்கிறது.


நாவலை வாசித்து முடித்ததும் பல நாட்களுக்கு காடு நம் மனம் முழுதும் நிரம்பித் தளும்புகிறது, நீலியின் உருவம் போல. நம்மைச் சுற்றியும் காடு இருப்பதான உணர்வு, மனக்கிளர்ச்சியாக, கனவுலகில் சஞ்சரிக்கும் பாவனையாக, நம்முள் இருந்துகொண்டே இருக்கிறது. இத்தனை நாளும் வெறும் சொல்லாக நமக்குள் இருந்துவந்த காடு இந்நாவலின் வாசிப்பின் மூலம் நம் அனுபவமாக மாறிவிடும் விந்தை நேரும் தருணங்கள் பிரமிப்பை ஊட்டுபவை. அவை வாசிப்பில் நாம் கண்டடையும் உன்னத, அபூர்வத் தருணங்கள், குறிஞ்சிப்பூவைக் காண்பது போல. ஆகவே, இந்நாவலின் வாசிப்பினூடாக நாம் பெறும் பேரனுபவம் என்றென்றும் மறக்க முடியாதது. வெகுநாட்களுக்குப் பிறகு ரசித்து, லயித்து, அனுபவித்து, வியந்து படித்த நாவல் காடு. இதுவரை படித்த ஜெயமோகன் நாவல்களில் காடு எனக்கு மிகவும் பிடித்த நாவல் மட்டுமல்ல மிகச்சிறந்த நாவல் என்றும் உறுதியாகச் சொல்லலாம்.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/06/blog-post.html#sthash.CF0yIFdR.dpuf

No comments:

Post a Comment