Tuesday, July 8, 2014

காடு-உரத்தசிந்தனை

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி. அந்தக் குறிஞ்சி நிலத்தின் மலைக்காட்டில்மக்களின் வாழ்க்கைமுறை எப்படி இருந்திருக்கும்/இருக்கிறதுஅதன் பாடுபொருள் ஏன் கூடலும் கூடல் நிமித்தமுமாக’ இருந்தது/இருக்கிறது’ என்பதை தன் புனைவில், கண்ணாடியின் பிம்பம் போல வாசகனுக்கு காட்டும் முயற்சிதான் ஜெயமோகனின் காடு.

இரண்டாம் முறை நான் இந்நாவலை படித்து முடித்தபோது அதிகாலை 5 மணி. ஒரு மலையுச்சியை அடைந்த பரவசமும் இன்னும் கொஞ்சம் பயணம் தொடராதா என்ற ஏக்கமும் ஒருசேரக் கலந்த உணர்ச்சி. முதல் முறை நான் படித்தது 2004-இல். தினமும் இரவு தூங்கப்போகும் முன் பத்துப் பத்துப் பக்கங்களாக படித்தேன். அதனால் கதையுடனேயே சில மாதங்கள் வாழ்ந்தேன். ஹி ஹி... அயணி மரம் நிக்குவ!’ என்று கஞ்சா போதையில் ஒருவன் சிரித்துக்கொண்டே உளறுவதைக் கூறியபோது படிக்காமலேயே அந்தச் சூழல் பிறருக்குப் புரிந்தது. இடையில் பலருக்கும் படிக்கக் கொடுத்தேன். இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாததாலும் மலையாளம் கலந்த நாஞ்சில்நாட்டு மொழியைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதவர்களும் துவக்கத்திலேயே திருப்பிக் கொடுத்துவிட்டனர். மாறாகபடித்து முடித்த பலரும் காட்டின் ரசிகர்களாயினர்! வேறு வழியில்லை எனக்குஇந்நூலின் சிறப்பை இப்படி என் அனுபவத்தை பிறர் பகிர்ந்துகொண்டதை வைத்துத்தான் நான் உணர்த்த முடியும்! ஏனெனில்இதற்கு நல்லதொரு விமர்சனம் எழுதிவிடும் அளவுக்கு என் எழுத்துத்திறன் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் எழுதாமலும் இருக்க முடியாது...

திருவிளையாடலில் ஒரு வசனம் வருமே... இதுல ஒரு விறகு எடுத்துவெச்சா ஒரு கல்யாணத்துக்கு சமைக்கலாம்இன்னொரு விறகு எடுத்துவெச்சா ஒரு ஊருக்கே சமைக்கலாம்என்று. அதுபோலவே இந்நாவலின் ஒவ்வோர் அத்தியாயத்திலிருந்தும் ஒரு சிறுகதையையும் ஒவ்வொரு பக்கத்திலிருந்து ஒரு கவிதையும் நம்மால் உருவாக்கிவிட முடியும்;மிகைப்படுத்துதலே இல்லை!. அப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் நுட்பமானநாம் அறிந்திராத காட்டின் அல்லது நாட்டின் மனிதர்களையும்அவர்களின் அகமன ஓட்டத்தையும்உறவுகளையும் சொல்லும் கதை. விவரனைகளில் அத்தனை ரசம்! காட்டில் நடக்கிறான் கிரிதரன். எங்கும் இழைகள் சிந்திசிதைந்துசருகுகளாய் பச்சையாய் இழைகள். மண்ணை பார்ப்பதே அரிது. அப்போது அவன் மனதில்,’மேற்பரப்பு முழுவதும் இழைகளால் மூடப்பட்ட ஒரு பெரிய ஏரி’ தான் காடு ஒன்றொரு உருவகம் வருகிறது. இப்படி ஒரே வரியில் உச்சம் தொடும் இடங்கள் பல!
ஒரு காட்டுக்குள் நீங்களாகவே அலைந்து திரிந்துவழி தவறிபயந்துமிருகங்களைக் கண்டு அஞ்சிபின்னர் அவற்றோடு இயல்பாகக் கலந்து காட்டு மனிதனாக மாறும் அனுபவம். மரத்தையும் யானையையும் மேலும் சினேகிக்க வைக்கும். அய்யோ! காட்டை இப்படி அழிச்சுப் போட்டாவளே!’ என்று உங்களை கதற வைக்கும். அந்தக் காட்டில்புற உலகின் எந்தச் சலனங்களுமின்றி வாழும் ஓரு மலைமகள்! குறிஞ்சிப்பூ மாலை அணிந்து தேனும் தினைமாவும் கிழங்கும் மட்டுமே உண்டு வாழும் குறிஞ்சிமகள்!. நீலி. புலியைக் கண்டால் பறவை என்ன ஒலி எழுப்புமோ, அந்த ஒலியை எழுப்பி யானையத் துரத்தவல்ல காட்டு மகள். அவள் மீது,மோகிக்கிறான் கிரிதரன். காமம் அறவே கலவாத முதற்காதலின் மயக்கம்! யாரோ எழுதியதுபோல், சங்க காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைக்கும் முயற்சி.

கிளர்ச்சி. ஒற்றைச்சொல்லில்காடு ஏற்படுத்தும் உணர்வை இப்படித்தான் சொல்ல வேண்டும். தேன் சுமந்த பூக்களின் நறுமணத்தாலோசுழித்தோடும் காட்டாற்றினாலோஎங்கும் நிறைந்திருக்கும் ஆச்சர்ய ரகசியங்களாலோகாதலாலோ, காமத்தாலோ எப்போதும் கிளர்ச்சியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது காடு. மலையத்தியான நீலியைக் கண்டு காய்ச்சலடித்துக் கிடக்கிறான் கிரிதரன்பல இரவுகளில்!. நமக்கோஅதை வாசிப்பதே காய்ச்சல் கொள்ளச் செய்வதாக இருக்கிறது. இப்படிச்சொல்லும் அதே வேளையில் பெண்களுக்கு இப்புத்தகம் என்னவிதமான உணர்வுகளைத்/வாசிப்பு அனுப்வத்தைத் தரும் என்றொரு கேள்வியும் என்னுள் எழுகிறது.

கூடலும் கூடல் நிமித்தமுமாக இருக்கும் மலைக்காட்டில் காமம் இயல்பாக அனுமதிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அது பாவம் என்ற கருத்தோகற்பு போன்ற கட்டுப்பாடுகளோ அங்கு அறியப்படவே இல்லை. காமத்தை ஒருபோதும் பெண்கள் தங்கள் சுயநலங்களுக்காக விற்பதும் இல்லை. இப்படி இருக்கின்ற காட்டில் காசுக்காக பெண்கள் லாரி டிரைவரை மறிப்பதையும் வெறும் சொல்லாக தேவடிச்சி’ என்று தங்களுக்குள் திட்டிக்கொள்வதையும்நாட்டு மக்களும் அரசாங்கமும் அவர்களது வாழ்வில் குறுக்கே வந்ததின் விளைவு என்பது சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆங்காங்கே இயல்பாகப் பொருந்திப்போகிறவேறு வழியில் வெளிப்படுத்திவிட முடியாத நற்றினை குறுந்தகை வரிகள். காட்டிலேயே தங்கிவிட்ட பெரும் ரசனைக்காரனான இன்ஜினியர் அய்யருக்கும் கிரிதரனுக்கும் இடையிலான பேச்சில் அதிகம் வருகின்றன. மேலும் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களின் போதும். விசும்புதோய் பசுந்தழை’ போன்று சில சொற்கள் அவர்களின் மனதைவிட்டு அகலாமல்காதலியையே நினைத்துக் கொண்டிருப்பவனை போன்றதோர் பித்துநிலை!.

ஒரு அத்தியாயத்தை படித்துமுடித்த போது ஏற்பட்ட உந்துதலால் நள்ளிரவில் அப்போதே தேடி,புத்தகத்தில் இருந்த ஓர் வரியைக் கொண்டு (சுனைப்பூக் குற்றுத் தொடலை தை) முழுப்பாடலை இணையத்தில் எடுக்கிறேன். முழுமையான விளக்கம் எங்கும் இல்லாதது நல்லதாகப் போயிற்று. நானாக சொற்களுக்கு அடிகளுக்கும் கபிலன் சொல்லாமல் உணர்த்திய குறிப்புகளுக்கும் விடைதேட முயல்கிறேன்அப்போதே அதை பதிவிலிடுகிறேன்

கதாபாத்திரங்களின் வசனங்கள்வாழ்வின் மிக முக்கிய சிந்திக்கப்பட வேண்டிய தத்துவங்களையும் யதார்த்தங்களையும் நொடியில் சர்வ சாதாரணமாக சொல்லிச் சென்றுவிடுகின்றன. காட்டை அழிப்பதற்கு தடையாக இருந்த அய்யர் இன்ஜினியர்வேலை பறிக்கப்பட்ட பின்னரும் காட்டிலேயே தங்கிவிடஅப்போது அங்கு ஆராய்ச்சி செய்யவரும் இளைஞனைப் பற்றி குறிப்பிடுகையில் இப்படிச் சொல்கிறார், ‘காட்டை அழிக்க வேண்டியது,அப்புறம் அழிஞ்சு போன இனங்களைப் பத்தி ஆராய்ச்சி
பண்றேன்னு கெளம்ப வேண்டியது’.  நாகரிக வாழ்வு என்ற பெயரில் மனிதன் செய்யும் கோமாளித்தனங்களை ஒரு வரி வசனத்தில் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறது. நீயாவது பொம்பளை மனசு நோகாம நடந்துக்கற ஆம்பளையா இருப்பேன்னு நெனச்சேன்...ம்ம்.. பொம்பளைங்க தலையெழுத்தே இப்படித்தான்’ என்று அம்பிகா அக்கா கிரிதரனிடம் சொல்வதில் கடந்த காலப் பெண்களின் சொல்லொனாக் கையறுநிலை திரும்பிப் பார்க்கப்படுகிறது. இப்படிப்பல. அவற்றுள் சிலவற்றைச் சொல்லும் கோயில் பூசாரியான போத்தியும் ஒரு இயல்பான பாத்திரம்.

குட்டப்பன். இவன்தான் உண்மையாக இக்கதையின் நாயகன். அந்தக் காட்டில் அவனால் செய்யமுடியாதது என்று எதுவுமே இல்லை. சமைப்பதாகட்டும்நோயாளிகளைத் தூக்கிக்கொண்டு ஓடுவதாகட்டும்சிறுத்தையை விரட்டுவதாகட்டும்,  பெண்களை மடக்குவதாகட்டும்சண்டைகளை விலக்குவதாகட்டும்சமயங்களில் முதலாளியயே மிரட்டுவதாகட்டும்... ஒரு ஆதர்ஸ மனிதன். ஆனால் அவன் பெரிய அறிவாளி அல்ல. ஒன்றுமறியாத முட்டாளும் அல்ல. அதன் மூலம்தான் அவனை ஒரு யதார்த்த பாத்திரமாக நிலைநிறுத்துகிறார் ஆசிரியர்.

மலையில் கிறித்தவம் எப்படி ஊடுருவிபரவிகாலூன்றியது என்பதும் மிஷினரிகள் ஆற்றிய மருத்துவ சேவைகளும் கதையில் வந்துபோகின்றன. அதே சமயம்எந்நேரமும் சாத்தான் சாத்தன்’ என்பதும் பாவிகளே’ என்பதும் ஒருவித ஒவ்வாமையை தோற்றுவிப்பதை அவர்களுக்கே உரிய பகடியுடன் சிநேகம்மையும் குட்டப்பனும் சொல்கிறார்கள். குரிசு நாடார் எப்பொழுதும் பைபிளும் கையுமாக இருந்து எழுத்துக்கூட்டி வார்தைவார்தைகளாக படித்து... ஒரு நகைச்சுவை பாத்திரம். பின்னர் நல்ல வியாபாரியாகவும் பிரசங்கியாகவும் ஆவது நல்ல திருப்பம்.

கிரிதரன் இளமையில் சிலவருடங்கள் காட்டில் வாழ்ந்த வாழ்க்கையும் அதன் அழகியலும் பரவசமும் முதுமைவரையிலும் நினைவில் வந்துகொண்டே இருக்கிறது. எப்போதும் மழைபெய்து கொண்டே இருக்கும் ஊரில் வீட்டின் உட்பக்க சுவர்களில், எப்போதும் ஊரி இருக்கும் ஈரம் போலகாட்டின் நீலியின் நினைவுகள். சாமார்த்திய சாலியாக இல்லாத கையாலாகதவனான கிரிதரனின் பிற்கால வாழ்க்கை அவன் கனவின் உன்னதங்களுக்கு நேர் எதிராக சூன்யமாக இருக்கிறது. முடிவுகள் எடுக்கமுடியாதவனுக்கு வாய்க்கும் பெரும் சோகம்!

மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளைகாமத்தின் பலவிதமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது” என்கிறது புத்தகத்தின் பின் அட்டை. அதனாலேயே மீள்வாசிப்பு அவசியமாகிறது. நான் இரண்டாம் முறை வாசித்த முதல் புத்தகம் இதுதான். குறிஞ்சி நிலத்தின் கலாச்சாரத்தை புரிந்துகொள்கிற வேளையில்மொத்தக் கேரளமுமே குறிஞ்சிதான் என்றொரு பிம்பம் - எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா எனத்தெரியவில்லை!

இன்றைக்கு நாம் உலக அரங்கிற்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு செல்வது குறித்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் இது அப்படிக் கொண்டுசெல்ல வேண்டிய முக்கிய நாவல் என எனக்குப்படுகிறது. எனினும்பெரிதும் மொழி சார்ந்த ஆக்கமாக இருப்பதால் அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. எஸ்.ரா. பரிந்துரைக்கும் தமிழின் முக்கிய நூறு நாவல்களில் இதுவும் ஒன்று என்பது ஒரு சிறிய முகவரிதான்!
http://vurathasindanai.blogspot.in/2011/08/blog-post.html

No comments:

Post a Comment